நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்கவினால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
ஒன்பதாவது நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் திகதி தெரிவு செய்யப்பட்டார்.
1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிறந்த ரணில் விக்ரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பிரதமராகப் பதவி வகித்தார்.
1970 ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
1977 ஆம் ஆண்டில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அவர் அப்போது கடமையாற்றினார்.
28 வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற அமைச்சரவை அமைச்சு பதவிகளை வகித்தார்.
1989 ஆம் ஆண்டு மார்ச் 06 முதல் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 07 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய ரணில் விக்ரசிங்க 1994 முதல் 2001 வரை மற்றும் 2004 முதல் 2015 வரை நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்திருந்தார்.
அவர் முதன்முறையாக 1993 ஆம் ஆண்டு மே மதம் 07 ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதிவரை அந்த பதவியை வகித்தார்.
அவர் ஆறு தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார். கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியைவகித்துவரும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய கடந்த 14ஆம் திகதி முதல் பதில் ஜனாதிபதிப் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.
பிறசெய்திகள்





