
கேரளா,ஜுலை 20
கேரளாவில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த பழம்பெரும் நடிகரின் உடலை வாங்க குடும்பத்தினர் முன்வராத நிலையில் அரசு சார்பில் இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் ராஜ் மோகன்(90). இவர் கடந்த 1967ஆம் ஆண்டு வெளியான இந்துலேகா என்கிற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இப்படத்தை கலா நிலையம் கிருஷ்ணன் நாயர் என்பவர் இயக்கி இருந்தார். இதன்பின்னர் ஏராளமான மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வந்தார்.
இயக்குனர் கலா நிலையம் கிருஷ்ணன் நாயரின் மகளை திருமணம் செய்துகொண்ட இவர், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று, பின்பு ஆதரவற்றோர் இல்லத்தில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ஆம் திகதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜ் மோகன் கடந்த ஞாயிற்று கிழமை உயிரிழந்த நிலையில், உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 நாள் ஆகியும் இவரது உறவினர்கள் யாரும் வராமல் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த விஷயம் கேரள கலாச்சாரத்துறை அமைச்சர் வாசவனுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் ராஜ் மோகனின் உடலை அரசு சார்பில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து, நேற்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.





