8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் இன்று பதவிப் பிரமாணம்

நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று காலை 10 மணியளவில் பிரதம நிதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

1981 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க ஜனாதிபதி தெரிவு (சிறப்பு ஏற்பாடுகள்) உறுப்புரைகள் மற்றும் அரசியலமைப்பின் 40ஆவது உறுப்புரை ஆகியவற்றின் பிரகாரம் பாராளுமன்றில் இடம் பெற்ற இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டார்.

பாராளுமன்றில் இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் 134 வாக்குகளை பெற்று ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க சபைக்கு அறிவித்தார்.

ஜனாதிபதியாக அறிவிக்கப்பட்டதை தொரடந்து சபையில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எனது வாழ்க்கை பாராளுமன்றம், பாராளுமன்றில் அதிக காலத்தை செலவழித்துள்ளேன் என குறிப்பிட்டதை தொடர்ந்து தனது பதவி பிரமாணம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற வேண்டும் என சபாநாயகரிடம் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அதற்கமைய 8 ஆவது நிறைவேற்றுத்துறை அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற கட்டத்தொகுதியில் பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

இலங்கை அரசியல் வரலாற்றில் சிரேஷ்ட அரசியல்வாதியாக கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளதுடன், இரண்டு தடவைகள் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து ஒரு தேசிய பட்டியல் ஆசனத்தின் ஊடாக 2021 ஜுன் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

Leave a Reply