ரணிலுக்கு எதிர்க்கட்சியினர் பலர் ஆதரவு வழங்கியதை மறைக்க இயலாது! – தினேஷ்

ஜனாதிபதி தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பின்போது வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள் என்பதை மறைக்க முடியாது என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம் பெற்று பெறுபேறு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கை அரசியல் வரலாற்றில் பாராளுமன்றத்தின் ஊடாக இரண்டாவது முறையாக ஜனாதிபதி தெரிவு இடம் பெற்றுள்ளது.

பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றிப்பெற்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நீண்ட காலமாக இருந்த சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் என்பதாலும், பிரதமராகவும், அமைச்சராகவும் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்கவால் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியும்.

கொரோனா வைரஸ் காரணமாக முன்னொருபோதும் இல்லாத சவாலுக்கு நாடு முகங்கொடுத்ததுள்ளது. பல மாதங்களுக்குப் பின்னர் அந்த சவாலை வெற்றிக்கொள்ள முடிந்தது.

ஆனாலும் உலகில் உள்ள ஏனைய நாடுகளைபோல இலங்கையும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்ததால் ஏற்பட்ட எதிர்ப்புக்களால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜனாதிபதியை தெரிவு செய்யும் இரகசிய வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பது உண்மை.

அதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. ஜனாதிபதி வேட்பாளர்களான அநுரகுமார திஸாநாயக்க, டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

அரசியல் நிலைப்பாடு மாறலாம். ஆனால் மனிதம் அனைவருக்கும் ஒன்று. எப்போதும் ஒரேமாதிரியான விடயங்கள் நடக்காது என்பது உலகில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடு முகங்கொடுத்திருக்கும் சவாலை எம்மால் வெற்றிக்கொள்ள முடியும் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply