
கொழும்பு, ஜுலை 21
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வகையில் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கான நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை தாங்கள் அங்கீகரிப்பதாக இலங்கை தேசிய கிறிஸ்தவ சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், அரசியலமைப்பின் 17 மற்றும் 19 ஆவது திருத்தங்களின் சிறந்த அம்சங்களை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றம் உடனடியாக எடுக்க வேண்டும் என்று தேசிய கிறிஸ்தவ சபை கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு எதிர்நோக்கும் இனப்பிரச்சினை உட்பட்ட சவால்களை கூட்டாக எதிர்கொள்ளும் இடைக்கால நடவடிக்கையாக, உடனடியாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு உழைக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தேசிய கிறிஸ்தவ சபை வலியுறுத்தியுள்ளது
இதன் மூலமே அனைவரும் சமத்துவத்துடனும் கண்ணியத்துடனும் உரிமையுடன் குடிமக்களாக வாழ முடியும்.
அதேநேரம் 6 -12 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தி, புதிய நாடாளுமன்றத்தை மக்கள் தெரிவு செய்ய முடியும் என்றும் தேசிய கிறிஸ்தவ சபை தெரிவித்துள்ளது.





