நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசாங்கம் நாட்டினை பொருளாதார நெருக்கடியில் இருந்து காப்பாற்றக்கூடிய அரசாங்கமா? என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் .
யாழ் .ஊடக மையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளதுடன் தனது கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து 100 நாட்களுக்கு மேலாக போராடிய போராட்டம் இதற்கு தானா ? என்ற கேள்வியும் இருக்கின்றது.
ரணில் விக்கிரசிங்கவும் மிகப்பெரிய ஊழல்வாதியாகவே பேசப்பட்டிருக்கிறார். புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சர்களுக்கும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் இருக்கின்றன.
எனவே இவர்கள் நாட்டினை வழிபடுத்துவார்கள் ,நெறிப்படுத்துவார்கள்,கடன் சுமைகளிலிருந்து மீட்டெடுப்பார்கள் என்பதனை மக்கள் நம்ப மாட்டார்கள்.
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற பொழுது ஆளும் கட்சி, எதிர்க்கட்சிஎன அனைவரும் இணைந்த ஒரு சர்வகட்சி ராசு உருவாகுமாக இருந்தால் உலக நாடுகள் நம்பிக்கைக் கொண்டு கடன்களை கொடுக்கவோ அல்லது நாட்டிற்கு உதவி செய்யவோ அது வழிவகுத்திருக்கும் என்ற சிந்தனை உலக நாடுகள் மத்தியில் இருந்தது.ஆனால் அந்த சர்வ கட்சி அரசாங்கம் உருவாகவில்லை.
எனவே தற்போது உருவாக்கி இருக்கின்ற அரசாங்கம் வெளிநாடுகளுக்கோ,நிதி நிறுவனங்களுக்கோ நம்பிக்கைக் கொடுக்கூடிய அரசாங்கமா? என்ற கேள்வி இருக்கின்றது .
ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக்களை ஏற்று ஜனாதிபதி பதிவிக்கு வந்த சில மணித்தியாலங்களுக்குள்ளேயே போராட்ட களத்தில் உள்ளவர்களை இராணுவம் வரவழைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்டது.
அது மாத்திரம் அல்ல பல பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ,சிலர் காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கு ஜனாதிபதி கூறிய காரணங்கள் உப்பு சப்பற்ற காரணங்களாக இருக்கின்றன .இது மோசமான ஜனநாயக விரோத செயற்பாடாகும்.
நாடு தற்போது முடங்கிப்போய் உள்ளமைக்கு எரிபொருள் தட்டுப்பாடு முக்கிய காரணமா இருக்கின்றது.
எனவே எரிபொருளினை ஓரிரு மாதங்களுக்குள் சீராக ரணில் விக்கிரமசிங்கவினால் தொய்வில்லாமல் வழங்கப்படுமாக இருந்தால் அவர் மக்களால் போற்றக்கூடிய ஜனாதியாக மாறலாம்.
இதனை வர செய்ய தவறினால் நாட்டில் போராட்ட்ங்களை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் நாடு போராட்டக்களமாக மாறலாம் .
அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ,தொடர்ச்சியாக நிலங்களை பறிமுதல் செய்வது ,பல்வேறுபட்ட திணைக்களங்களூடாக தமிழ் மக்களுடைய புராதன இடங்களை அபகரித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் பேசுவதாக தமிழ் தரப்பினர் ஒன்றிணைந்து செயற்படுவர்களாக இருந்தால் சில விடயங்களை நிறைவேற்றக்கூடிய முயற்சிகளை மேற்கொள்ளலாம் .
தமிழ் தேசிய தரப்பில் உள்ளவர்கள் தற்போது வந்திருக்கும் அரசாங்கத்துடன் கூட்டாக இணைந்து பேசுவதற்கு முயற்சிப்பார்களா?இல்லையென்றால் தங்களுடைய சொந்த விருப்பு,வெறுப்புக்களுக்கு இணங்க செயற்பட போகிறார்களா? என்பது எதிர்காலத்தில் எங்கள் முன் இருக்கக் கூடிய கேள்வியாக இருக்கின்றது – என்றார்.
பிறசெய்திகள்





