அமைதி – வன்முறையற்ற ஒன்றுகூடலுக்கான உரிமை உறுதிசெய்யப்படும்! – ஜனாதிபதி

அமைதியான, வன்முறையற்ற ஒன்றுகூடலுக்கான உரிமைகளை நிலைநாட்டுவதை உறுதிசெய்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவது தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 21 ஆவது சரத்தும், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைகளை வழங்கும் இலங்கை அரசியலமைப்பின் 14 (1)(ஆ) உறுப்புரையும் அரசாங்கத்தால் பின்பற்றப்படும் என ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க தெரிவித்தார்.

அமெரிக்க சிவில் லிபர்டீஸ் யூனியன் வழங்கிய அறிவுறுத்தல்களில், அரசாங்க கட்டடங்களை தடுப்பதற்கும், சொத்துக்கள் வடிவமைக்கப்பட்ட பிற நோக்கங்களில் தலையிடுவதற்கும் எதிர்ப்பாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மேலும் விளக்கினார்.

நகருக்குள் அமைதி வழியிலான போராட்டங்களுக்கு, சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படாமல் தொடர அனுமதிக்கப்படுவதை உறுதிசெய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இராஜதந்திரிகளுக்கு விளக்கப்பட்டது.

விகாரமஹாதேவி பூங்காவில் திறந்தவெளி அரங்கு, புதிய நகர மண்டபம், ஹைட் பார்க் மற்றும் கெம்பல் பார்க் போன்ற இடங்கள் அமைதிப் போராட்டங்ளுக்காக ஒதுக்கப்படும்.

கோட்டகோகம போராட்டத் தளம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யும் போது, ​​தவறான சமூக ஊடக அறிக்கைகளுக்கு மாறாக, பாதுகாப்புப் படையினரால் அது அகற்றப்படவில்லை என்று விளக்கப்பட்டது.

மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அனைவரையும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவது உட்பட பின்பற்றப்படும் சட்ட வழிகள் குறித்தும், சட்டமா அதிபரால் இதன்போது விளக்கமளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply