கிணற்றில் குதித்தவர் மரத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்!

மட்டு கொக்கட்டிச்சோலை – மகிழடித்தீவு பிரதேசத்தில் காளி கோயில் ஆலமரத்தில் தூக்கிட்ட நிலையில், ஆண் ஒருவர் சடலமாக நேற்று (25) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

மகிழடித்தீவு பாடசாலை வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய குமாரசாமி திலகேஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் குடும்ப பிரச்சினை காரணமாக சம்பவ தினமான நேற்று முன்தினம் இரவு வீட்டின் கிணற்றில் குதித்து உயிரிழக்க முயற்சித்த நிலையில் அங்கிருந்து காப்பாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து குறித்த நபரின் மனைவியார் இன்று அதிகாலை ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்ல எழுந்து கணவரை தேடிய போது அவரை வீட்டில் காணவில்லை.

எனவே அவர் அருகில் சென்றிருக்கலாம் என நினைத்து அவர் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் அந்த பகுதியிலுள்ள காளி கோயில் மூலஸ்தானப் பகுதியிலுள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply