இனி வாகன வருமான அனுமதிப்பத்திரம் இருந்தால் எரிபொருள் கிடைக்கும் – அமைச்சர் அதிரடி

வாகன வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தை பயன்படுத்தி , தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான பதிவை மேற்கொள்ளும் வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ,எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தனது (31) டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டுக்கான சேஸ் இலக்கத்துடன் பதிவு செய்ய முடியாத வாகனங்களை இன்று (31) முதல் வருமான உரிம இலக்கத்துடன் பதிவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் அனுமதிச் சீட்டைப் பெறுவதில் சிக்கல்கள் இருந்த அனைத்துப் பகுதிகளுக்கும் இதுவரை தேவையான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் 746 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்று QR கோட் முறையைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இது ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கையாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு அல்லது QR குறியீடு முறை மற்றும் கோட்டா முறையின் கீழ் நாளை (ஆகஸ்ட் 01) முதல் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த இலக்கத்தகட்டின் கடைசி இலக்கம், டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் நாளை முதல் செல்லுபடியாகாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கு ஒரு வார கால அவகாசம் உள்ளதால், நாளை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்றுகூடி நெரிசலை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, QR கோட் முறையின் கீழ் எரிபொருளை வழங்குவதன் மூலம் எரிபொருள் பாவனை 70 வீதத்தால் குறைக்கப்படும் என பெற்றோலிய தனியார் டேங்கர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும் இன்று எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் இணைச் செயலாளர் திரு.சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply