கர்நாடகாவில் இலங்கையர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைப்பு! நீதிமன்றில் தகவல்

இந்தியாவின் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் இலங்கை குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுக்கு கர்நாடக மேல் நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.

கர்நாடக மாநில சட்டப் பணிகள் ஆணையத்தால் 25 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு, நேற்று திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த விடயம் தொடர்பில், மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய புலனாய்வு அமைப்பு, கர்நாடக உள்துறை அமைச்சகம், மங்களூரு தெற்கு காவல்துறை மற்றும் பெங்களூரு நகர்ப்புற துணை ஆணையர் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் செய்த கர்நாடக மாநில சட்டப்பணிகள் ஆணையகத்தின் செயலாளர், வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள 25 பேர் உட்பட்ட 38 இலங்கை குடிமக்கள் சட்டவிரோதமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தார்.

இதனையடுத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த தடுப்புக் காவல் ‘சட்டவிரோதமானது’ மற்றும் மனித உரிமை மீறல் எனக் கூறி, அவர்களை தடுப்பு மையங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இந்த 25 இலங்கை குடிமக்களும் முறையான ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் இன்றி சட்டவிரோதமாக விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மங்களூரு காவல்துறையினர் அவர்களை கடந்த வருடம் கைதுசெய்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply