
முதன்முறையாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களையும் அழைத்து யாழ். மாவட்டச் செயலகம் நேற்று நடத்திய கலந்துரையாடலில் பல்வேறு முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டச் செயலர் க.மகேசன் தலைமையில் நேற்று பி.ப. முக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலர்கள், இ.போ.ச. வடபிராந்திய முகாமையாளர், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேற்று தொடக்கம் ’கியூஆர்’ அடிப்படையில் மாத்திரம் எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. இதனை ஒரு வாரத்துக்கு அவதானித்து அதன் பின்னர் கிராம அலுவலர் பிரிவு ரீதியான எரிபொருள் விநியோகத்தை நடைமுறைப்படுத்துவதை ஆராயலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொலிஸார் தமது தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அது தொடர்பில் பிரதேச செயலர்களால், எந்தெந்த பொலிஸ் நிலையத்தினர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்ற விவரமும், பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்புவதற்கு அனுமதிப்பது என்றும், அலுவலகத் தேவைக்கு தமது தனிப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்தும் பொலிஸாரின் விவரங்களை பிரதேச செயலகத்துக்கு சமர்ப்பித்து, பிரதேச செயலர் அனுமதித்தாலேயே அதற்கு எரிபொருள் நிரப்பலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்குச் பயணமாவதற்கு கொழும்புக்கு செல்லும் வாகனங்களுக்கு பிரதேச செயலரின் பரிந்துரையுடன் இலங்கை போக்குவரத்துச் சபையின் சாலைகளில் எரிபொருள் நிரப்ப முடியும்.
அந்த வாகனத்துக்கு ’கியூஆர்’ நடைமுறைக்கு அமைவாக 40 லீற்றர் டீசல் பெற முடியும் என்பதால், போக்குவரத்துச் சபை எஞ்சிய 60 லீற்றர் டீசலையே விநியோகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மரக்கறிகளை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் இவ்வாறு டீசல் விநியோகிக்க இலங்கை போக்குவரத்துச் சபை இணங்கியுள்ளது.
பாடசாலை சேவைகளில் ஈடுபடும் வாகனங்கள், தனியார் பேருந்துகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வாகனங்கள், இலங்கை மின்சார சபையின் வாகனங்கள், ரெலிக்கொம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விநியோகிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் சாலையில் வழங்கப்படும் என்றும் நேற்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை மாலை 5 மணியுடன் மூடுவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டபோதும் அதிலுள்ள சில சிக்கல்கள் காரணமாக அந்த முடிவை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தமது பகுதிக்குரிய பிரதேச செயலர்களுடன் கலந்து ஆலோசித்து மேற்கொள்ள முடியும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எவ்வளவு வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்பதை முற்கூட்டியே அறிவித்து, அதற்கு மேலதிகமாக வாகனங்களை அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு, எரிபொருள் நிரப்பு நிலையத்தைச் சூழ அதிகளவானோர் நிற்பதை அனுமதிக்க வேண்டாம் என்றும் அதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்களை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.





