தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் பொருளாதார வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்!

தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முயற்சித்தால் அது நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையவே வழிவகுக்குமென கொழும்பு வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போராட்டங்கள் மூலம் அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் வகையில் அரச மற்றும் தனியார் துறையினர் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, எதிர்வரும் 09ஆம் திகதி நாட்டில் மற்றுமொரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு சில தரப்புக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த சங்கத்தின் செயலாளர் சமிந்த விதானகமகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் மேற்படி சங்கம் நேற்று நடத்திய ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போராட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிக அதிகமாகும்.இதனால் சுற்றுலாத்துறை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

அரச துறையில் ஊழல்,வீண் விரயங்களை கட்டுப்படுத்துவதற்காக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முக்கியமானதாகும்.

ரஷ்ய யுத்தம் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் தடைப்பட்டதையடுத்து ஐரோப்பிய நாடுகளின் உல்லாசப் பிரயாணிகள் ஆசிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

எதிர்வரும் நவம்பர் மாதமளவில் சுற்றுலாப் பிரயாணிகளுக்கான காலம் ஆரம்பமாகும் நிலையில் இரண்டு அல்லது மூன்று மாத காலத்தில் நாட்டின் பொருளாதாரத்துக்கு அதன்மூலம் குறிப்பிட்டளவு பங்களிப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிறசெய்திகள்

Leave a Reply