முன்னாள் பிரதி அமைச்சரின் வீட்டில் 160 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை!(படங்கள் இணைப்பு)

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான மர்ஹூம் நூர்தீன் மசூரின் புத்தளம் நாகவில்லு பகுதியில் உள்ள வீட்டை உடைத்து 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தங்கம், பணம் மற்றும் பொருட்கள் என்பன திருடப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பில் இன்று புத்தளம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரபல வர்த்தகருமான மர்ஹூம் நூர்தீன் மசூர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

முன்னாள் பிரதி அமைச்சரான மர்ஹூம் நூர்தீன் மசூர், பிரபல வர்த்தகர் எனவும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல வர்த்தக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முன்னாள் அமைச்சரின் மரணத்திற்குப் பின்னர் அவரது மனைவி புத்தளம் நாகவில்லு வீட்டில் வசித்தி வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், முன்னாள் அமைச்சரின் மனைவி சில நாட்களாக வீட்டில் இல்லாத போது,   வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தங்கம், பணம் மற்றும் பொருட்கள் என்பனவற்னை திருடிச் சென்றுள்ளதாக செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் கூறினர்.

எவ்வாறாயினும், கிடைத்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட ஒருசில பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேற்படி கொள்ளும் சம்பவத்தில் 10 இளைஞர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனையில் , புத்தளம் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக புத்தளம் தலைமையக பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply