சென்னை, ஓக 5
யாழ்ப்பாணத்தில் இருந்து இரப்பர் படகில் தமிழகத்திற்கு தனித்து தப்பிச் சென்ற போலந்து நாட்டவர் தீவிரவாத அமைப்புக்களுடன் தொடர்பில் இருந்தாரா அல்லது இராணுவப் பயிற்சிகள் பெற்றாரா என்பது தொடர்பில் தமிழக பொலிசார் விசேட விசாரணைகள் நடத்தி வருகிறார்கள்.
அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி வேதாரணியம் பொலிசார் விடுத்த வேண்டுகோளை, வேதாரணியம் நீதிமன்றம் கடந்த 3ஆம் திகதி ஏற்றுக்கொண்டு, 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதியளித்தது.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ள முனைக்காடு கடற்கரையில் கடந்த ஜூலை மாதம் 25ம் திகதி யாரும் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது.
கரை ஒதுங்கிய படகை கைப்பற்றிய கடலோர காவல்படையினர் அது குறித்து விசாரித்து வந்தனர். அன்று இரவு வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த MATUSZEWSKI WLADYSLAW FRANCISZEK என்ற நபர் என தெரிய வந்தது.
இலங்கையின், யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இருந்து காற்று நிரப்பி நீரில் செல்லும் இரப்பர் படகில் வந்தவர் என்பதும், அவர் வந்த படகே யாருமில்லாமல் மீட்கப்பட்டது என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . மீண்டும் கடந்த 3ஆம் திகதி அவர் வேதாரணியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளிக்கப்பட்டது.
அவரிடம் முதல் நாள் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான போலந்து நபரின் செயற்பாடுகளே அவர் இராணுவப் பயிற்சி பெற்றவர் அல்லது தீவிரவாத அமைப்பொன்றில் பயிற்சி பெற்றவர் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தமிழக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், போலந்துக் காரரோ அதையெல்லாம் மறுத்து வருகிறார். அந்த வித்தைகள் எல்லாம் தானாக வாய்த்தது என அசால்ட்டாக சொல்கிறார் அவர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எவ்வளவு பெரிய வித்தைக்காரன் என்பதும், இலங்கையில் என்னென்ன வித்தைகள் எல்லாம் காண்பித்திருக்கிறார் என்பதும் தெரிந்து தமிழக பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கைதான போலந்துக்காரர் மீது இலங்கையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் சில பாரதூரமானவை. போலந்திலிருந்து 2019 ஓகஸ்டில் இலங்கைக்கு வந்த இந்த நபர், இலங்கை வந்த இரண்டாவது நாளே ஏரிஎம் திருட்டில் ஈடுபட்டுள்ளார். கொழும்பில் ஏரிஎம் இயந்திரமொன்றை உடைத்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் மாத்தறை, வெலிகம பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு கைதானார். பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், அருகம்பைக்கு சென்றவர், அங்கு மது அருந்தி விட்டு, ஒருவரை தாக்கி காயப்படுத்தினார். அங்கும் கைதாகி விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அங்கிருந்து தப்பிச் சென்றவர், சீசெல்ஸ் பிரஜையை போல போல பாஸ்போர்ட் தயாரித்து நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றார். இந்த வருட ஆரம்பத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில், போலி கடவுச்சீட்டின் மூலம் நாட்டை விட்டு வெளியேற முயன்று, அது அம்பலமானதும், விமான நிலையத்திற்குள் தப்பியோடி, மேற்கூரைக்குள் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட பரபரப்பு சம்பவத்திற்கு சொந்தக்காரர் இந்த நபர்தான்.
அவர் விமான நிலைய ஊழியர்களின் பிடியிலிருந்து தப்பியோடியது, இலாவகமாக சுவர் தாண்டி குதித்தது, அனாயாசமாக மேற்கூரைக்கு தாவியது என அன்று அவர் காட்டிய வித்தைகள் இலங்கை பாதுகாப்பு தரப்பினரை பிரமிக்க செய்ததுடன், அது பற்றி ஊடகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது அவரது கழுத்தில் எழுதப்பட்டிருந்த 4693 என்ற இலக்கம் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது தமிழகத்தில் சிக்கியுள்ள நிலையில், அந்த இலக்கம் அங்குள்ள ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது.இந்த நிலையில், மீண்டும், ஜூலை மாதம் இரப்பர் படகில் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கு தனித்து தப்பிச் சென்று, தமிழக பொலிசாரிடம் மாட்டியுள்ளார்.
ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னர், மீண்டும் ஒருமுறை அவர் செய்திகளில் இடம்பிடித்தார். இதே இரப்பர் படகை குருநபர் பகுதியில் விட்டு விட்டு, அந்த பகுதிகளில் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த போது, படகிலிருந்த பல பொருட்கள் திருட்டு போயிருந்தன. அது தமிழ் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தது.





