மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று(12) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”மன்னார் மாவட்டத்தில் கடந்த 11 தினங்களாக கோவிட் தொற்று மிகவும் அதிகமாக காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மொத்தம் 967 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இந்த மாதத்தின் முதல் 11 நாட்களில் மொத்தம் 103 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் மொத்தமாக 6 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன் மாவட்டத்தில் இதுவரை 40 நபர்கள் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
103 நோயளர்கள் எம்மால் கண்டறியப்பட்டால் இதை விட 7 அல்லது 8 மடங்கு நோயாளர்கள் சிகிச்சைக்கு வைத்தியசாலைக்கு வருகை தராமல் சுய சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடுகளில் தங்கி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.
இந்த தொற்றானது சாதாரண நிலையில் காணப்பட்டாலும் கூட ஒரு சமூகத்தில் மிகவும்,குறுகிய காலத்தில் பரவும் போது திரிவடையக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.
இவ்வாறு திரிவடைந்தால் வீரியம் கூடிய வைரஸ் ஒன்று இந்த சமூகத்தில் உருவாகி பரவினால் அதிக உயிரிழப்புகள் ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளது.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக பொதுமக்களை வீட்டில் தங்கி இருக்கவோ அல்லது பிரதேசங்களை முடக்கவோ முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே பொது மக்கள் இவ்வாறான சூழ்நிலையில் கட்டாயம் முக கவசங்களை அணிந்துக்கொள்ள வேண்டும். கூடிய அளவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்த இடங்களில் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்



