
வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு- செலவுத்திட்டம் நேற்று தோல்வியடைந்தது. இந்த நிலையில், அண்மையில் ஆட்சிக்கு வந்த புதிய அணியின் ஆட்சி கவிழுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சபையின் அடுத்த ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் சபையில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்போது வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் 2 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர். சுயேச்சைக்குழு, ஈ.பி.டி.பி, அங்கஜன் இராமநாதன் தரப்பினர் ஆதரவாப வாக்களித்தனர். அதனால் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் கருணானந்தராசா (வயது 76) கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கொரோனா தொற்றால் உயிரிழந்திருந்தார். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி புதிய தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
அதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட கே.சதீஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து , சுயேச்சைக் குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா புதிய தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஈ.பி.டி.பி, சுயேச்சைக்குழு ஆகிய தரப்பின் பின்னணியில் எம்.ஏ.சுமந்திரன் அணியின் ஆதரவோடு சுயேச்சைக்குழு வல்வெட்டித்துறை நகரசபை ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. தவிசாளராக செல்வேந்திரா பதவியேற்று இரண்டு மாதங்கள் கூட முடிவுறாத நிலையில் அவரது முதலாவது வரவு-வெலவுத்திட்டம் நேற்று தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை, நேற்றிலிருந்து 14 ஆவது நாளில், வரவு-செலவுத்திட்டங்கள் திருத்தங்களுடன் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அன்றைய தினமும் வரவு-செலவுத்திட்டம் தோல்வியடைந்தால்,
தவிசாளர் பதவி இழக்க நேரிடும்.



