ஆரோக்கியமற்ற சூழலில் நாவலரின் சிலை! ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் யாழ். மாநகர முதல்வருக்கு கடிதம்!

ஆரோக்கியமற்ற சூழலில் நாவலருக்கான சிலை வைத்து விடுவதால் மட்டும் நாவலரின் எண்ணங்கள் ஈடேறிவிடாது என ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையின் தலைவர் சின்னத்துரை தனபாலா, யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இவ்வாறு எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாவலர் கலாசார மண்டபம் தொடர்பாக உங்களுக்கு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையினராகிய நாம் ஏற்கனவே அதனை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்திடம் கையளியுங்கள் என்று கோரிக்கை முன்வைத்திருந்தோம்.

மாற்றுக் கருத்துக்கே இடம் இல்லாத வகையில், எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லாமல், நூறு சதவீதம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கலாசார மண்டபத்திற்கு உரிமைபூண்ட இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தோடு, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபையினராகிய நாம் கலந்துரையாடி, எதிர்வரும் ஆண்டை ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் ஆண்டாகவும், இருநூறாவது நாவலர் தினமாகவும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கலாசார மண்டபத்தை முழுமையான ஆன்மிகச் செழுமை மிக்கதோர் இடமாக மாற்றும் வகையில், பத்து மில்லியன் ரூபா செலவில் புனர்நிர்மாணச் செயற்பாடுகளை இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் மூலமாகச் செயற்படுத்தத் தீர்மானித்திருக்கின்ற நிலையில், நாம் முகநூற் புத்தகங்களூடாக, மாநகர சபை நாவலர் கலாசார மண்டபத்தில் முன்னெடுக்கவுள்ள செயற்பாடு பற்றி அறிந்த செய்தி மிகுந்த மன வேதனை அளிக்கிறது.

நாவலர் கலாசார மண்டபத்தில் நாவலர் சிலை நிச்சயமாக வைக்கப்பட வேண்டும். ஆனால், அந்தப் பெருமகனாரின் சிலையை, நாவலர் கலாசார மண்டபத்தை ஒரு ஆன்மிகச் சூழலுக்குரிய இடமாக மாற்றிவிட்டு, நீங்கள் இந்த முயற்சியை எடுத்திருந்தால் நிச்சயம் அது மகிழ்ச்சியைத் தந்திருக்கும்.

இதுவரை காலமும் அதற்கான எந்த முயற்சியும் எடுக்காத மாநகர சபை, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் முன்னெடுக்கின்ற நாவலர் கலாசார மண்டபம் தொடர்பான செயற்பாடுகளுக்குத் தடை ஏற்படுத்தும் செயற்பாடாகவே நாம் இதனைக் கருதுகிறோம்.

நாவலர் கலாசார மண்டபத்தில் ஆத்மார்த்தமான பணிகள் முன்னெடுக்கப்பட்டால் அதனை முதலில் வரவேற்கும் சபை நம் சபைதான். ஆறுமுகநாவலர் சபையின் தற்போதைய தலைவர் என்ற வகையில், ஒரு விடயத்தை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இலங்கைத் திருநாட்டில் யாழ்ப்பாணம் என்றால் கற்றவர்கள் நிறைந்த சமூகம் என்றும் அவர்களின் ஒவ்வொரு செயலும் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்தது என்றும் எண்ணியது ஒரு காலம். இன்று எமது நிலையை எண்ணி நாம் மிகமிக வேதனைப்பட வேண்டி இருக்கிறது.

இலங்கையில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் பற்றிய விடயங்களுக்கு முக்கியத்துவம் தரும் எவரும், ஆறுமுக நாவலர் சபையைத் தவிர்த்துப் பார்க்க முடியாது. இலங்கையில் நாவலர் பெருமானுக்குப் பெருமைமிகு நிகழ்வு முன்னெடுத்தது தொடக்கம் யாழ்ப்பாணத்தில் நாவலர் பிறந்த இடத்தில் நாவலர் கலாசார மண்டபம் அமைக்கும் பணிக்குப் பின்னூக்கியாக இருந்து செயற்பட்டு, நாவலர் பெருமானின் எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் அத்தனை செயற்பாடுகளிலும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை தன்னை நிலைநிறுத்தி முன்னின்று செயற்பட்டு வருகிறது.

நாவலர் பெருமானின் எண்ணங்களுக்குச் செயல் வடிவம் கொடுக்க எண்ணுகின்ற எவரும் உங்கள் செயற்பாட்டில் போட்டி மனப்பாங்கைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். சுய இலாபம் தேடும் எண்ணங்களோடு நாவலருக்கான செயற்பாடுகளை முன்னெடுக்காதீர்கள்.

சைவத் தமிழ் உலகிற்காய் தன் வாழ்வை அர்ப்பணித்த பெருமகனின் எண்ணங்களுக்கு ஆரோக்கியமான செயல் வடிவம் கொடுங்கள். நாவலருக்கான பணியை ஆத்மார்த்தமான செயற்பாடாக முன்னெடுங்கள். முதலில் நாவலர் கலாசார மண்டபத்தை ஆன்மிகச் சூழலுக்கு உரிய இடமாக மாற்றுங்கள்.

நாவலரின் எண்ணங்களை உண்மையோடு நீங்கள் முன்னெடுக்க விரும்பினால், நல்லவர்களின் ஆத்மா நம் செயல்களுக்கு வலிமை தரும். எல்லோரும் இணைந்து செயற்படுங்கள். நல்ல எண்ணத்தை ஒரு தேர் போல ஒன்று சேர்ந்து இழுங்கள். ஒன்றாக முன்னேறுங்கள். சைவத் தமிழரின் நலனுக்கான செயற்பாடாக உங்கள் அனைவரதும் செயற்பாடு அமையட்டும். ஒரு ஆரோக்கியமற்ற சூழலில் நாவலருக்கான சிலை வைத்து விடுவதால் மட்டும் நாவலரின் எண்ணங்கள் ஈடேறிவிடாது என அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply