ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கைவைத்த பணிப்பெண் !

நான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் மாடாக உழைத்தும் எனக்கு போதுமான சம்பளம் கொடுக்கவில்லை என அந்த வீட்டில் திருடிய பணிப்பெண் ஈஸ்வரி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் ஈஸ்வரி. ஐஸ்வர்யா இயக்குநராக இருந்து வருகிறார். அவர் பட வேலைகளுக்கு வீட்டை விட்டு செல்ல நேரிடும். அந்த நேரத்தில் அவரது குழந்தைகளான யாத்ரா, லிங்காவை ஈஸ்வரிதான் பார்த்துக் கொண்டார்.

அது போல் ரஜினிகாந்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட போதும், அவர் படப்பிடிப்புக்கு செல்லும் போது ஐஸ்வர்யா அவரை உடனிருந்து கவனித்துக் கொண்டார். இதனால் பெரும்பாலான நாட்கள் ஐஸ்வர்யாவால் வீட்டில் தங்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் தனுஷுடனான பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா தனது தந்தையின் போயஸ் தோட்ட வீட்டிற்கே வந்துவிட்டார். அப்போது ஏற்கெனவே இருந்த சிஐடி நகர் வீட்டிலிருந்து அவருடைய பொருட்களை கொண்டு செல்லும் போது அவரது நகை லாக்கரையும் கொண்டு சென்றார்.

கடைசியாக 2019 ஆம் ஆண்டு சவுந்தர்யா- விசாகன் திருமணத்தின் போது அந்த நகைகளை அணிந்திருந்தார். அதன் பின்னர் அந்த நகைகளை லாக்கரில் வைத்திருந்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி அவருடைய நகை லாக்கரை ஐஸ்வர்யா எடுத்து பார்த்துள்ளார். அப்போது அதிலிருந்து 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக தேனாம்பேட்டை போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அவை என்னென்ன நகைகள் என ஐஸ்வர்யாவுக்கு தெரியவில்லை.

இதையடுத்து பணிப்பெண் ஈஸ்வரி, கணவர் உமாபதி, லட்சுமி ஆகிய 3 பேர் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஈஸ்வரிக்கும் இந்த திருட்டிற்கும் சம்பந்தம் உள்ளதாக போலீஸார் சந்தேகித்தனர். ஈஸ்வரியும் ஒப்புக் கொண்டார். அவரது வீட்டிலிருந்து போலீஸார் 100 பவுன் நகைகளையும் 4 கிலோ வெள்ளியும், 30 கிராம் வைரமும் பறிமுதல் செய்தனர். 95 லட்சம் மதிப்பிலான வீட்டு பத்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் ஈஸ்வரியின் கணவர் உமாபதியின் வங்கிக் கணக்கில் திருட்டு நகைகளை விற்ற பணத்தை டெபாசிட் செய்ததால் அவருக்கும் இந்த திருட்டில் தொடர்பிருக்கலாம் என்பதால் விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்தது.

மேலும் சோழிங்கநல்லூரில் வீட்டை வாங்கிய போது இதற்கு பணம் ஏது என உமாபதி, ஈஸ்வரியிடம் கேட்டுள்ளார்.

அதற்கு ஈஸ்வரி நான் ஐஸ்வர்யா ரஜினியின் பினாமி. என் பெயரில் அவர் சொத்துகளை வாங்கியுள்ளார். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. வெளியுலகை பொருத்தமட்டில் இது நம் வீடு, ஆனால் உண்மையில் அவருடைய வீடு என நம்ப வைத்துள்ளார்.

மேலும் ஐஸ்வர்யா புகாரில் சொன்னதை விட நிறைய நகைகள் கைப்பற்றப்பட்டதால் ரஜினி, தனுஷ் வீட்டிலும் ஈஸ்வரி கைவரிசையை காட்டியிருப்பாரோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈஸ்வரியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் சில தகவல்கள் கிடைத்துள்ளன.

அதன்படி ஈஸ்வரி கூறுகையில், நான் ஐஸ்வர்யா வீட்டில் மாடு போல் உழைத்தேன். அவர் சொன்ன எல்லா வேலைகளையும் செய்தேன். அவருக்கு நல்ல வசதி இருந்தும் எனக்கு குறைந்த அளவிலான ஊதியத்தையே கொடுத்தார். மாதம் ரூ 30 ஆயிரம் ஊதியம் ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்குமா?

அதனால் சின்ன சின்னதாக திருடினேன். என்னை கண்டுபிடிக்கவில்லை. இதனால் நகைகளையும் சிறுக சிறுக திருடினேன். என்னை கண்டுபிடிக்காததால் மேலும் மேலும் அந்த திருட்டு தொடர்ந்தது. இரு அடுக்கு மாடி வீட்டையும் வாங்கினேன். இன்னும் கொஞ்ச நாட்கள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்திருந்தால் நான் இன்னமும் திருடியிருப்பேன் என ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் பணிப்பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசனை 2 நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.

The post ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கைவைத்த பணிப்பெண் ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *