மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை பகுதியில் நவீன கருவிகளை பயன்படுத்தி புதையல் தோண்ட முயற்சித்த இராணுவ லெப்ரினன் கேணல் உட்பட நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மாவடியோடை பகுதியில் உள்ள தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதியிலேயே இவர்கள் புதையல் தோண்ட முயற்சித்திநிலையில் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெலிக்கந்தையில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் பொறுப்பதிகாரி அவரின் கீழ் கடமையாற்றும் இரண்டு இராணுவ உத்தியோகத்தர்கள் மற்றும் தேரர் ஒருவர் உட்பட நான்குபேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாண்டியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த குழுவினர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய இராணுவத்திற்குரிய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் புதையல் கண்டறிவதற்காக பயன்படுத்துவதற்கு கொண்டுவந்த நவீன கருவிகளும் மீட்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.