சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளியேன்: ஜனாதிபதி காட்டமான அறிவிப்பு!samugammedia

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் சட்டம் ஒழுங்கை மீற எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதேபோல் தான் ஒருபோதும் பயனற்ற தீர்மானங்களை மேற்கொள்ளப் போவதில்லை எனவும், மாறாக சரியான தீர்மானங்களையே எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

முப்படைகளினதும் தலைவரான ஜனாதிபதி, அநுராதபுரத்திலுள்ள விமானப்படை முகாமில் இன்று (01) முப்படையினருக்கான சிறப்புரை ஆற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துச் சுதந்திரத்திற்கமைய தன்னை விமர்சிக்க அனைவருக்கும் சுதந்திரம் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீதிகளில் வன்முறைகளை மேற்கொள்ள எவருக்கும் உரிமை இல்லை எனவும் வலியுறுத்தினார்.

சரியானதை செய்ய அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளதாக என்பதை அறியவே, சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்பித்ததாகவும் தெரிவித்தார்.

அதனை உதாரணமாக கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் புதிய சிந்தனைகளுடன் புதிய பயணத்தை தொடர்ந்தால் 25 வருடங்களுக்குள் பெரும் அபிருத்தியை அடைய முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போன்றே நாட்டின் பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகொண்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த துரித நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்காக முப்படைகளினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக தேவையென வலியுறுத்திய ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கடந்த காலங்களில் படையினர் வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *