சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், ‘இப்போது அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை’ எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.
அதற்கெதிரான பொதுச் செயற்பாடுகளை நசுக்க புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் உள்ளதாக உத்தர லங்கா கூட்டணியின் தலைவரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள தொழிற்சங்கங்கள், தேசிய அமைப்புகள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து பொது நடவடிக்கைகளும் இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடவேண்டும் என்றும் அதற்காக தங்களை அழைக்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
‘இந்த நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு நாம் கூறுகிறோம், ‘இஸ்ரேல் ஜனாதிபதி கொண்டுவந்த அடக்குமுறை சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் எழுந்து நின்றது போல், இந்த தீய நடவடிக்கைக்கு எதிராக நாம் அனைவரும் எழுந்து நிற்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் மாபெரும் கண்டன இயக்கத்தைத் தொடங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.