இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும் எனவும் அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவோம் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த செஹான் சேமசிங்க, அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன என்று தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்திட்ட நடவடிக்கைகளை சர்வதேச நிதி நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாம் காலத்திற்குள் பொருளாதார வளர்ச்சி முன்னெற்றமடையும்.
சகலருக்கும் நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்துக்கு 38 இலட்ச குடும்பங்களில் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த விண்ணப்பங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மையானதா என்பது பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக பரிசீலனை செய்யப்படுகிறது.
சமுர்த்தி பயனாளர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு உலக வங்கி ஆலோசனை வழங்கியுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண தொகை தொடர்பில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை நிதியமைச்சு ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் எடுத்த தீர்மானங்கள் வெற்றி பெற்றுள்ளன. பணவீக்கம் கட்டம் கட்டமாக குறைவடைகிறது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டுக்குள் உணவு பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்துக்கு நிலைப்படுத்துவவோம் என்று தெரிவித்துள்ளார்.