ஓய்ந்துபோனதா எதிர்ப்பு குரல்கள்: தமிழர்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டுமா?samugammedia

தமிழர்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மழுங்கடிக்கப்பட்டு ஒரு தசாப்தம் கடந்த நிலையில் போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிக்காகப் போராடி வரும் நிலையிலும் சிங்களப் பேரினவாத அரசு தமது இனவாத நடவடிக்கைகளை நிறுத்திவிடத் தவறவில்லை. அதில் ஒரு கட்ட நிகழ்ச்சி  நிரலாக தமிழர் தாயகப் பிரதேசஙகளில் காணப்படும் தொடர்ச்சியாக தமிழர்களின் பண்பாட்டு, வழிபாட்டு இடங்கள் தொல்லியற் திணைக்களத்தால் அண்மிய காலங்களில் அபகரிக்கப்பட்டு தமிழர்களின் மரபுரிமையை அழித்தொழிக்கும் நிலை காணப்படுகிறது.

ஆரம்ப கட்டத்தில்  நல்லிணக்க அடிப்படை என்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தி மறைமுகமாக பௌத்தமயமாக்கலை முன்னெடுத்து வந்த  சிங்களத் தரப்பு தற்போது வெளிப்டையாக தமது கோர முகத்தை வெளிப்படுத்தும் நிலை காணப்படுகின்றது.

அந்த வகையில் நெடுந்தீவு வெடியரசன் கோட்டை , கன்னியா வெந்நீர் ஊற்று என்பன தொல்லியற் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்டும்  கீரிமலை சிவன் கோயில் , வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயம் என்பன உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது.

அத்தோடு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் பௌத்த விகாரையொன்றும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இத்தோடு இலங்கை இந்தியா பக்தர்கள் ஒன்று கூடி வழிபாடாற்றும் கச்சதீவு அந்தோனியர் தேவாலயத்திலும் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்திருந்தன.

இவற்றி்ல் அண்மையில் வவுனியா நெடுங்கேனியிலுள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விக்கிரகங்கள் உடைத்தெறியப்பட்ட சம்பவம் பல அதிர்வலைகளை உருவாக்கியது.

ஏற்கனவே பல்வேறு பிரச்சனைக்குட்பட்ட குறித்த வழிபாட்டுப் பிரதேசத்தில் முன்னர் சிறிது காலம் வழிபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன் பின் மக்கள் இயல்பாகச் சென்று வழிபட அனுமதியளிக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறானதொரு சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

அந்த வகையில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் , இந்து மத பொது அமைப்புக்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்கள் பலவும் இவ் விடயம் தொடர்பில் மிகுந்த கவனத்தை செலுத்தியிருந்தனர்.

அந்த வகையில் சிவசேனை , சைவ மகா சபை , யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் , வெடுக்குநாறி ஆலய நிர்வாகம் மற்றும் வெவ்வேறு தரப்பினர் தமது எதிர்ப்புக்களை போராட்டங்கள் மூலமாகவும் கவனயீர்ப்பு மூலமாகவும் தமது எதிர்ப்பலைகளை  வெளிப்படுத்தினர்.

இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக
கடந்த மார்ச் மாதம்  31 ம் திகதி நல்லை ஆதீனத்தில் ஒன்றுகூடிய பல்வேறுபட்ட  இந்து சமயம் சார் அமைப்பினர் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுதலைத் தடுக்கும் முகமாக தீர்மானங்களை நிறைவேற்றி அத் தீர்மானங்கள் அடங்கிய கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தனர்.

இது இவ்வாறு இருக்க ஏப்ரல் 1 ம் திகதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒன்றுகூடிய 7 அரசியல் கட்சிகளினதும் 22 சமூக மட்ட அமைப்பு சார் பிரதிநிதிகளினதும் கலந்துரையாடலின் ஈடுபட்டிருந்தனர்.

பல மணி நேரம் எவ்வித முடிவுமின்றி தொடர்ந்த கலந்துரையா நிறைவில்  திட்டமிட்டு அழிக்கப்படும் தொல்பொருள் சார் விடயங்களுக்கு எதிராக எதிர்ப்பு இயக்கமொன்றை ஆரம்பித்து எதிர்காலத்தில் விழிப்புணர்வு நடவடிக்கை மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஒரு நிர்வாகக் குழுவும் தெரிவு  செய்யப்பட்டது.

இக் கலந்துரையாடல் நடைபெற்ற சம காலப்பரப்பில் கடந்த ஏப்ரல்  2 ம் திகதி கடற்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா மற்றும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் பங்கேற்பில் மீள விக்கிரகம் பிரதிஸ்டை செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில் அந் நடவடிக்கைகளுக்காக முதல் நாள் முன்னாயத்தப் பணியில் ஈடுபட்ட.3 பேர் கைது செய்யப்பட்டு பல மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்டனர்.

குறித்த மீள் நிர்மாணிப்பு நடவடிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தோரைக் கைது செய்யும் சந்தர்ப்பத்தில் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவராவது களத்தில் இருந்திருந்தால் தனக்குரிய சிறப்புரிமையைப் பயன்படுத்தி கைது நடவடிக்கையைத் தடுத்திருக்கலாம்.

இந் நிலையில் 2 ம் திகதி நேரடியாக விஜயம் செய்த இருவரும் குறித்த இடத்தை பார்வையிட்ட பின் கொழும்பில் சென்று ஜனாதிபதியுடன் பேசிவிட்டு உரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில்  ஓரிரு நாளைக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் தரப்பிலிருந்தும் புதுவருடத்துக்குப் பின்னர் உரிய தீர்வினை வழங்கவுள்ளதாக குறிபபிட்டிருந்தார்

இதே வேளை இடிக்கப்பட்ட கீரிமலை ஆதி சிவன் ஆலயத்தில் மீள ஏப்ரல் மாதம் 6 ம் திகதி சிவலிங்கம் பிரதிஸ்டை செய்வதற்கு அனுமதியினைக் கோரியிருந்த நிலையில் அவ் அனுமதியும் மறுக்கப்பட்டிந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறு வெவ்வேறு தரப்பினரும் வெவ்வேறு நிலைப்பாட்டில்  வெவ்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையி்ல் இவ் விடயம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க எத் தரப்பும் முயலவில்லை. நடைபெற்று ஒரு வார காலங் கடந்தும் இதுவரை எவ் விதமான எதிர்ப்பு நடவடிக்கைகளையும் எந்தவொரு தரப்பினரும் மேற்கொள்ளவில்லை.

இது இவ்வாறு இருக்கையில் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஒரு சிலரிடம் இது பற்றி வினாவிய போது ,

குறித்த தீர்மானங்களடங்கிய கடிதமானது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சாதகமான பதிலுக்காக இரு வார கால அவகாசம் எதிர்பார்த்துள்ளதாகவும் அக் கால அவகாச எல்லைக்குள் எவ்வித சாதககமான பதில்களையும் வழங்காத சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கவனயீர்ப்பு போன்றவற்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்

இவற்றுடன் புதுவருடக் காலப்பகுதியாக இருப்பதால் இக் கால கட்டத்தில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுதலானது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்யுமெனவும் ; புது வருட காலப்பகுதியில் பலர் தமது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில் இவ்வாறான எதிர்ப்பு செயற்பாடுகள் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய வாய்ப்புநிலை உருவாகும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இத்துடன் தமிழ்த் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் வலியுறுத்துமாறு கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அனைத்து தரப்பினரின் செயற்பாடுகளும் வாய்ப்பேச்சளவில் மட்டுமே காணப்படுகிறது. எந்தவொரு தரப்பினரும் களத்தில் இறங்கி செயலாற்ற தயாரில்லை என்பதுடன் செயற்படும் ஒரு சிலர் மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டங்களை தம் சுயலாப நோக்க செயற்பாடுகளுக்கு
உபயோகிக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

தமிழர் தரப்பை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் பிரதிநிதிகளும் மக்களின் நலனைக் கருத்திலெடுக்காது தமது பதவிகளைத் தக்கவைப்பதற்காக நிலையற்ற அரசியலை முன்னெடுப்பதும் அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக அடிபணிந்து செல்வதும் ; எவ்வித நிபந்தனைகள் , கொள்கையின்றி அரசியலை முன்னெடுப்பதும் சிங்கள அரசு தமிழர்களை அடக்கியாள சாதகத் தன்மையை வழிகாட்டுகின்றது.

இவற்றுடன் தமிழ் மக்களிடம் காணப்படும் மறதியே இனத்தின் மிகப்பெரிய சாபக்கேடாகும். நமக்கெதிராக ஒரு சம்பவம் அரங்கேறும் தருணம் அதற்கு ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிவிட்டு அடுத்த சம்பவம் நிகழாதபடி என்னன்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற எவ்வித முன்னெடுத்தல்களையும் மேற்கொள்வதில்லை.  இது அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரும் சாதகத் தன்மையை உருவாக்க வழிகோலுகின்றது.  ஒவ்வொரு பிரச்சினைகள் எழும் போது புதுப்புது கோசங்ளை மக்கள் மத்தியில் இட்டு மக்களை பகடைக்காய்களாக்கி தம் வாக்கு வங்கியை தக்க வைக்கும் செயற்பா்டையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் தரப்பு பல்வேறு கோணங்களில் பிரிவுபட்டு காணப்படுதலை தனக்கு நேர்த்தன்மையாக கொண்டு  அரச தரப்பு தொல்லியற் திணைக்களம் என்ற அரச இயந்திரத்தின் உதவியுடன் தமிழர்கள் மீதான அடக்கு முறைகளை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. சில தினங்களுக்கு முன்னரும் கன்னியா வெந்நீருற்றானது தொல்பொருட் திணைக்கள ஆளுகைக்குட்படுத்தி பற்றுச்சீட்டு வெளியிட்டதற்கு ஒப்பாக குறிகட்டுவான் தொடக்கம்  நயினாதீவு வரையான படகுச் சேவைக்கான பற்றுச்சீட்டிலிருந்த நயினாதீவு என்ற தமிழ்ச் சொற்பதம் நாகதீபய என சிங்களமொழி உச்சரிப்பிற்கு பெயர்மாற்றஞ்செய்து அச்சிசிடப்பட்ட பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் நாவற்குழிப் பிரதேசத்தில் விகாரை திறப்பு விழாவில் போரினை முன்னின்று நடாத்தி போர்க் குற்றவாளியாக சர்வதேச ரீதியாக முத்திரை குத்தப்பட்ட இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்வில் பங்கெடுத்த மக்களை விட தமிழர் பிரதேசங்களில் நடைீபறும் அரசின் அத்துமீறல்களுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்து கொள்ளும் மக்கள் தொகை குறைவாகக் காணப்படுகின்றமை கவலைக்குரிய விடயமே

தொல்லியற் திணைக்களம் தமது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து நடைமுறைப்படுத்திவருகையில் தமிழர் தரப்பு ஒன்றாக இணைந்து எதிர்ப்புக்களை வெளிப்படுத்த வேண்டிய தருணத்தில் கட்சிகள் , அமைப்புக்கள் என பல்வேறு தரப்புக்களாய் சிதறுண்டு ஒரு தீர்மானத்தை கூட எடுத்து அமுல்ப்படுத்தமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இவற்றோடு அண்மிய காலங்களில் பேசுபொருளாகவுள்ள 13 ம் திருத்தச் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் 13 ம் திருததச்சட்டத்திலுள்ள மாகாண பொலிஸ் அதிகாரம் நடைமுறையிலிருந்திருந்தால் இவ்வாறான தொல்லியல் இடங்களில் நடபெறும் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தலாம் என்று கருத்துரைத்திருந்தார்.

13 ம் திருத்தச்சட்டமானது அரசியலமைப்பிலிருக்கும் திருத்தச்சட்டமாக காணப்படுவதாகவும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இது இவ்வாறு இருக்கையில் 13 ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி தமிழர்களுக்கு தீர்வுத்திட்டத்தை வழங்கவுள்ளதாக அரசு கூறியிருந்த நிலையில் ஆளுக்கொரு தரப்பாக அதிலுள்ள குறை நிறைகளை அறியாது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே எது எவ்வாறாயினும் நன்மையோ தீமையோ அனைத்து தரப்பினரும் ஒருமித்து கலந்துரையாடி தமிழ் மக்கள் சார் நலன்மிக்க விடயங்களை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும். இவ்வாறாக ஓருமித்து செயற்பட்டாலே  எம் இனத்தின் தீர்வு திட்டம் சார் முன்னெடுத்தல்களை உள்ளகத் தரப்பைக் கடந்து வெளியகத் தரப்பினரின் ஆதரவு நிலைப்பாட்டை தக்க வைக்க முடியும்.

இதுவரை  காலமும் நம் இனத்தின் ஒற்றுமையின்மையால் பல்வேறு இழப்புக்களை சந்தித்து வரும் நிலையி்ல் நவீன யுகத்தில் மூழ்கியுள்ள அடுத்தடுத்த சந்ததியினருக்கு எமது இனத்தின் வரலாறுகள் , பண்பாட்டு அம்சங்கள் மற்றும் தொல்லியல் அடையாளங்களை கடத்தும் மிகப்பெரிய பொறுப்புள்ளது. இக் கடமையை தமிழர் தரப்பு என்று ஓரணியி்ல் நின்று மேற்கொள்ளத் தவறின் சிங்களப் பேரினவாத அரசு தனது அரச இயந்திரங்களின் துணையோடு தமிழர்களின் உரிமைகளை அடக்கியாளும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

எனவே தமிழினப் பற்றோடு அனைத்து தரப்பினரும் ஒன்றிணையாத  வரை அன்று அற வழியில் தமிழர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக போராடிய தந்தை செல்வா கூறிய “தமிழர்களை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்ற தீர்க்கதரிசனமான கருத்து மெய்ப்பிக்கப்படும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.

Leave a Reply