கிளிநொச்சி கண்டாளவளை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்களில் இடப்பட்ட எல்லைக்கற்கள் பொருத்தமான பகுதிகளில் நாட்டப்பட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தட்டுவன்கொட்டி கிராமத்திலிருந்து பிரமந்தனாறு வரையான கடலோர பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் எல்லைக்கற்கள் இடப்பட்டது.
குறித்த எல்லைக்கற்கள் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலயத்தை மையப்படுத்தி வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டதுடன், எல்லைக்கற்களும் இடப்பட்டது.
குறித்த பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் விவசாய நிலங்கள் என நீண்டகால மக்கள் பயன்பாட்டு பகுதிகளும் உள்ளடக்கப்பட்ட நிலையில், மக்களால் இவ்விடயத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலயைில், மக்களாலும், கண்டாவளை பிரதேச செயலாளர் ஊடாகவும் குறித்த விடயம் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் மற்றும் ஜனாதிபதி செயலணி உள்ளிட்ட கூட்டங்களில் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனவள பாதுகாப்பு பிரிவு ஆகியன வசம் உள்ள மக்கள் பயன்பாட்டு காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் ஜனாதிபதி விசேட செயலணி ஊடாக முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.
இன்று கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளியம்பொக்கணை கிராமசேவையாளர் பிரிவில் விவசாய நிலங்களில் எல்லையிடப்பட்ட கற்கள் அகற்றப்படவும், அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எல்லையிடுவதற்குமான நில அளவீடு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பணியில் நில அளவை திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம சேவையாளர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.