தேசிய பாதுகாவலனாக கோட்டாபய ராஜபக்ஷவை தெரிவு செய்த சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் பெறும் ஏமாற்றமடைந்துள்ளார்கள். இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது.அரசியல் அழுத்தத்துடனான விசாரணை கட்டமைப்பு காணப்படும் வரை ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலின் உண்மை நோக்கம் வெளிவராது. காலம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், 43 ஆவது படையணியின் தலைவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43 ஆவது படையணியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை பிரதான தேர்தல் பிரசாரமாக்கி ராஜபக்ஷர்கள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாதம், கருத்தடை உள்ளிட்ட பல விடயங்கள் பொதுஜன பெரமுனவின் மேடை பேச்சுகளாக காணப்பட்டன.தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியது.
நாட்டு மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள்,கத்தோலிக்கர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை தேசிய பாதுகாவலனாக தெரிவு செய்தார்கள்.
இறுதியில் ஏமாற்றமடைந்தார்கள்.ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் அரசியல் நோக்கத்துக்காக இடம்பெற்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.குண்டுத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் நான்கு பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்தார்.