கம்பஹா அணிகளை வீழ்த்தி கயிறு இழுத்தலில் வெற்றி மகுடம் சூடிய யாழ்.அணிகள்…! இரண்டாக அறுந்த கயிறு…!samugammedia

இன்றையதினம் யாழ்ப்பாண ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கும் கம்பஹா ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கும் இடையே தனித்தனியே நடைபெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் கம்பஹா அணிகளை  வீழ்த்தி யாழ். அணிகள் வெற்றி மகுடம் சூடியது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட சூரிய அறக்கட்டளையின், இலவச சிங்கள வகுப்பு மாணவர்கள் கடந்த 19ஆம் திகதி சுற்றுலா பயணத்தினை மேற்கொண்டனர்.

அந்தவகையில் இன்றையதினம் கம்பஹாவில் உள்ள சூரிய நிறுவகத்தின் கல்வி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதன்போது பல்வேறு போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.

போட்டிகளின் இறுதியில் கயிறு இழுத்தல் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என இரு பிரிவினர் பங்குபற்றினர். அந்தவகையில் கம்பஹா பெண்ணின் அணியை வீழ்த்தி யாழ்ப்பாண பெண்கள் அணியினர் வெற்றி வாகை சூடினர்.

அடுத்ததாக யாழ்ப்பாண ஆண்கள் அணிக்கும் கம்பஹா ஆண்கள் அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது. இதில் கம்பஹா ஆண்கள் அணியினர் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பங்குபற்றினர்.

யாழ்ப்பாண அணிக்கும் கம்பஹா ஏ அணிக்கும் இடையே நடைபெற்ற நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கம்பஹா ஏ அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தெரிவானது. அடுத்தபடியாக கம்பஹா பி அணிக்கும், யாழ்ப்பாண அணிக்கும் இடையே நடைபெற்ற பலப்பரீட்சையில் யாழ்ப்பாண அணியினர் வெற்றியீட்டி இறுதிச் சுற்றுக்கு தெரிவாகினர்.

இந்நிலையில் யாழ்ப்பாண அணிக்கும் கம்பஹா ஏ அணிக்கும் இடையே மிகவும் சுவாரசியமான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யாழ்ப்பாண அணியினர் தம்பக்கமாக கயிற்றினை இழுத்து முன்னேறினர் இதன்போது கயிறு இரண்டாக அறுந்தது.

இதன்போது இரண்டு அணிகளும் வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் வெற்றியீட்டிய அணிகளுக்கான பரிசில்களை பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய வழங்கி வைத்தார்.

இந்த சுற்றுலா உட்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் சூரிய அறக்கட்டளை மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதற்கு சூரிய நிறுவகம் மற்றும் ஹெல்தி லங்கா நிறுவனத்தின் வடக்கு மாகாண இயக்குனர் தேவராஜா பிரேமராஜா அவர்கள் தலைமை தாங்கியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply