உலக முற்போக்கு ஜனநாயக சக்திகள் சிறந்த நட்புச் சக்திகள்- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம்…!samugammedia

தமிழ் மக்களைப் பொறுத்தவரை சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகெங்கும் வாழும் முற்போக்கு ஜனநாயக சக்திகள் நல்ல நட்புச் சக்திகளாவர். இந்த நட்புச் சக்திகளோடு வலுவான ஐக்கிய முன்னணி கட்டியெழுப்பப்படல் வேண்டும். இவ் நட்பு சக்திகளை அணி திரட்டவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளமைக்கு பல காரணங்கள் உள்ளன.

அதில், முதலாவது தேசியப்போராட்டத்தின் வெற்றி சர்வதேச அரசியலில் தங்கியிருப்பதாகும். எனவே சர்வதேச அரசியலை எமக்கு சார்பாக திருப்புவதற்கு நட்பு சக்திகளின் ஆதரவு மிகமிக அவசியம்.

அதுவும் பூகோள அரசியல் நலன்களினாலும் புவிசார் அரசியல் நலன்களினாலும் சுற்றிவளைக்கப்பட்ட மக்கள் கூட்டத்திற்கு இவ் ஆதரவு மிகமிக அவசியம்.
வல்லரசுகள்  பூகோள, புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தான் செயற்படும.; இது அனுபவ ரீதியாக நாம் கண்டறிந்த உண்மை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டமைக்கு பூகோள, புவிசார் அரசியல்தான் பிரதான காரணமாகும்.

வல்லரசுகளின் ஆதரவு இல்லாவிட்டால் ஆயுதப் போராட்டத்தை ஒருபோதும் தோற்கடித்திருக்க முடியாது. தனிநாட்டுப் போராட்டம் பூகோள, புவிசார் நலன்களுக்கு எதிராக இருந்தமையினாலும், தாம் கையாள முடியாத வகையில் விடுதலைப் போராட்டம் இருந்தமையினாலுமே ஆயுதப் போராட்டத்தை அழித்தொழித்தனர்.
இன்று ஆயுதப்போராட்டம் இல்லை.

தமிழ் மக்கள் உள்ளக சுய நிர்ணயத்தையே கோரிநிற்கின்றனர். சீனாவின் பக்கம் இலங்கை அதிகம் சாய்ந்துவிடக்கூடாது என்பதற்காக உள்ளக சுயநிர்ணய கோரிக்கையையும் கணக்கில் எடுக்க வல்லரசுகள் தயாராகவில்லை. அதேவேளை இலங்கை அரசின் மீது செல்வாக்குச் செலுத்த தமிழ் மக்களை ஒரு கருவியாகவும் பயன்படுத்த முற்படுகின்றனர். தமிழ்த் தலைமையின் பலவீனத்தால் புவிசார் அரசியலில, பூகோள அரசியலில்  தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பங்கையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் சிறிய அரசுகளும், சர்வதேச சிவில் சமூகமுமே எமக்கு சார்பாக இருக்கக்கூடிய நிலை உள்ளது. இதிலும் கூட சிறிய அரசுகள் நாடுகளுக்கிடையிலான உறவுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பார்க்கும். ஆனால் சர்வதேச சிவில் சமூகம் சர்வதேச விழுமியங்களின்படியே செயற்படும். இதன் ஆதரவை பெறுவதற்கு சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு மிகமிக அவசியமாக உள்ளது.

இரண்டாவது தமிழ் மக்கள் எண்ணிக்கையில் சிறிய தேசியஇனம் அது தனது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதற்கு சர்வதேச ரீதியான ஆதரவு அவசியம். சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு கிடைக்கும்போது பேரம்பேசும் பலமும் பன்மடங்கு அதிகரிக்கும். பேரம்பேசும் பலத்தை ஆதரவு தளத்ததினால் மட்டும் கட்டியெழுப்புவது போதாது. அரசியல் அறிவியல், பொருளாதாரத் துறைகளிலும் வளர்த்தெடுக்க வேண்டும். சர்வதேச அபிப்பிராயத்தை திரட்டுவதற்கும் அதனை ஒருங்கிணைப்பதற்கும் இவ் ஐக்கிய முன்னணி உதவக்கூடியதாக இருக்கும்.

மூன்றாவது தமிழர் தாயகம் இன்று பச்சை ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இலங்கை அரசாங்கம் தான் உருவாக்கிய சட்டங்கள், நீதிமன்றங்களுக்குக்கூட இது விடயத்தில் மதிப்பு அளிப்பதில்லை. அதனுடைய ஒரே நோக்கம் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருத்தல் என்பதை அழிப்பதாக இருப்பதால் நீதிமன்ற கட்டளைகளை கூட மீறி வருகின்றது. இவ் விவகாரம் ஒரு அரசியல் விவகாரமாக இருப்பதால் சட்ட அணுகுமுறை போதிய பயன்களை தரமாட்டாது.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஆக்கிரமிப்புக்கள் ஒருவகையில் முற்றுப்பெற வடக்கு நோக்கி இவை திரும்பியுள்ளன. முல்லைத்தீவு மாவட்டம் இதில் முக்கிய இலக்காக இருக்கின்றது. இந்த ஆக்கிரமிப்புக்களை உடனடியாக நிறுத்தவேண்டும். சர்வதேச ரீதியான அரசியல் பாதுகாப்புப்பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்புவதன் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும். இலங்கை அரசு இன்று அனைத்து விடையங்களிலும் சர்வதேச சமூகத்தில் தங்கியிருப்பதனால் சர்வதேச அழுத்தங்களின் ஊடாகவே ஆக்கிரமிப்புக்களை நிறுத்த முடியும். சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகள் இந்த விடயத்தில் பயனுள்ள பங்களிப்புகளை ஆற்றக்கூடியவர்களாக இருப்பர்.

சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஆதரவு உடனடியாக வந்துவிடும் எனக் கூறிவிட முடியாது. அதற்கான நிபந்தனை அதற்கு தகைமைபெற்றவர்களாக தமிழ் மக்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். அதில் முதலாவது தமிழ் மக்கள் ஒரு ஜனநாயக அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். சர்வதேச சமூகம் ஜனநாயக நீதிக் கோட்பாட்டின்படியே செயற்படுகின்றது.

ஜனநாயக நீதியை வலுவாக பின்பற்றாத அமைப்புக்களை சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். துரதிஸ்டவசமாக தமிழ்ச் சூழலில் ஜனநாயக ரீதியாக செயற்படுகின்ற சிவில் அமைப்புக்களோ, அரசியல் கட்சிகளோ மருந்துக்குக்கூட கிடையாது. தற்போதுசெயற்படும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளில் எந்த ஒரு கட்சியும் ஜனநாயகப் பண்புகளையோ இதன் அடிப்படையில் அமைந்த கட்டமைப்புக்களையோ கொண்டதாக இல்லை.

சிறிதளவு ஜனநாயகப்பண்புகளைக் கொண்ட தமிழரசுக் கட்சியையும் சம்பந்தனும், சுமந்திரனும் சிதைத்துவிட்டார்கள். இன்று தேவையானது அரசியல் கட்சிகளையும், பொது அமைப்புக்களையும் இணைத்த, உலகம் தழுவிய வகையில் தமிழ் மக்களின் நலன்களை கையாளக்கூடிய அரசியல் பேரியக்கமே! இந்த பேரியக்கத்தை ஜனநாயகப் பண்புகளோடு கட்டியெழுப்பாமல் சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது.

இரண்டாவது அக முரண்பாடுகளை ஜனநாயகப் பண்புளை அடிப்படையாகக் கொண்டு தீர்க்க முயற்சிக்க வேண்டும். தமிழ்ச் சமூகம் தனக்குள்ளே ஒரு பகுதி மக்களை ஒடுக்கிக்கொண்டு சர்வதேச சமூகத்தின் ஆதரவை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் வர்ணிப்பதுபோல இல்லாவிட்டாலும் தமிழ் மக்கள் மத்தியில் சாதி, மத, பிரதேச, பால் முரண்பாடுகள் இருக்கின்றன என்பதை நிராகரிக்க முடியாது. தமிழ்த் தேசிய எதிர்ப்பு சக்திகள் இன்று இவற்றை ஊதிப்பெருப்பித்துக்காட்ட முற்படுகின்றனர். தென்னிலங்கை ஊடகங்களும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றன.

அக முரண்பாடுகளில் சாதிய முரண்பாட்டையும், பிரதேச முரண்பாட்டையும் இல்லாமல் செய்ய வேண்டும். மத முரண்பாட்டிலும், பால் முரண்பாட்டிலும் சமத்துவத்தைக் கொண்டுவர வேண்டும். தற்போது மத முரண்பாடு திட்டமிட்டு கிழப்பப்படுகின்றது. இந்தியாவின் இந்துத்துவா சக்திகள் தமிழ்த் தாயகத்தில் நுளைந்து இதனை திட்டமிட்டு கிளப்ப முற்படுகின்றனர். அவர்;கள் தமிழ்நாட்டில் செய்யமுடியாததை இங்கு செய்ய முற்படுகின்றனர். தமிழ்நாட்டில் திராவிட அரசியல் பலமாக இருப்பதனால் சிறியளவில் கூட அங்கு ஊடுருவ முடியவில்லை. இந்துத்துவா கொள்கைகளுக்கும், தாயகத்தில் வளர்ச்சியடைந்துள்ள சைவ சித்தாந்த கொள்கைகளுக்கிடையே வேறுபாடுகளும் அதிகம்.

இங்கே நிலவும் சைவ-கிறீஸ்தவ முரண்பாடு எத்தகைய தன்மையைக் கொண்டிருந்தாலும் புற முரண்பாடல்ல அகமுரண்பாடேயாகும். புற முரண்பாடுகளைக் கையாள்வதுபோல அக முரண்பாடுகளை ஒருபோதும் கையாளக்கூடாது. ஆறுதிருமுருகன் போன்ற சமூகப்பெரியார்களுக்கும் இந்த வேறுபாடு தெரியாதது கவலைக்குரியது. அவர் சிங்கள பௌத்தர்களால் மட்டுமல்ல தமிழ் கிறீஸ்தவர்களாலும் சைவமக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனக் கூறுகின்றார். இரண்டையும் புற முரண்பாடாகவே பார்க்க முற்படுகின்றார். திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்த குளத்திற்கு முன்னால் பௌத்த விகாரை கட்டப்பட்டபோது பெரிய எதிர்ப்புக்குரல்கள் எவற்றையும் இவர்கள் காட்டவில்லை.

சைவ-கிறீஸ்தவ முரண்பாட்டை ஊதிப்பெருப்பிப்பது தமிழ்த்தேசிய அரசியலுக்கு இரண்டு வகைகளில் தீங்கினை விளைவிக்கின்றது. ஒன்று தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதை இது தடுக்கின்றது. இரண்டாவது சர்வதேச அரசியலைக் கையாள்வதை அது பலவீனமாக்குகின்றது. கிறீஸ்தவர்களுடன் முரண்பாட்டை வளர்த்துக்கொண்டு சர்வதேச அபிப்பிராயத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. இந்த அபாயங்கள் ஆறு திருமுருகன் போன்றவர்களுக்கு தெரியாது என்றும் கூறிவிட முடியாது.

இந்த விமர்சனங்கள் அவர்மீது இருக்கின்றது என்பதற்காக அவரது சமூகச் செயற்பாடுகளை எவரும் குறைமதிப்புக்கு உள்ளாக்க வேண்டாம். அது தொடர்பான மதிப்பு இக் கட்டுரையாளருக்கு எப்போதும் இருக்கின்றது. ஆறு திருமுருகன் போன்ற சமூகப் பெரியார்கள் இதுபோன்ற விவகாரங்களில் நடுவர்களாக செயற்பட வேண்டுமே தவிர விவகாரத்தின் ஒரு பகுதியாக அவர்கள் மாறிவிடக்கூடாது.

மூன்றாவது முஸ்லீம் மக்கள் தொடர்பாக தமிழ்தரப்பின் அணுகுமுறையாகும். இது விடயத்தில் வலுவான ஜனநாயகவாதிகள் என்பதை தமிழ்த்தரப்பு வெளிக்காட்ட வேண்டும். இதில் இரண்டுவகையான கொள்கைநிலைப்பாடு அவசியம். ஒன்று வடக்கு-கிழக்கு முஸ்லீம் மக்களின் தாயகம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும.; இரண்டாவது தமிழ்-முஸ்லீம் முரண்பாடு என்பது ஒரு தாயகத்தில் வாழும் இரண்டு தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடு என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்தஒரு உரையாடலின்போதும் இந்த இரண்டு கொள்கை நிலைப்பாடுகளுமே அடித்தளமாக இருக்க வேண்டும்.

உண்மையில் இந்த கொள்கை நிலைப்பாடுகள் தந்தைசெல்வா காலத்திலிருந்தே கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும். அவை போதியளவு செயல் வடிவம் பெறவில்லை என்பதுதான் கவலைக்குரியது. சர்வதேச சமூகத்தில் முஸ்லீம் சமூகம் ஒரு முக்கியமான அங்கம். இவர்களை பகையாளியாக்குவது சர்வதேச அபிப்பிராயத்தை கட்டியெழுப்புவதில் பாரிய தடங்கல்களை ஏற்படுத்தும்.

நான்காவது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கு மதிப்புக்கொடுத்து அதனை நடைமுறையில் செயற்படுத்துவதாகும். மனித உரிமைகள் என்பது இன்று சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முக்கியமான ஒழுக்க விழுமியமாகும். இதனை நாமும் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட சர்வதேச முற்போக்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்டுவதற்கும், ஐக்கிய முன்னணியை அமைப்பதற்கும் வலுவான கொள்கைத்திட்டங்களும் செயல் திட்டங்களும் அவசியம். புலம்பெயர் சக்திகள் இதில் அதிக பங்களிப்பினை ஆற்ற முடியும். ஏற்கெனவே உதிரி உதிரியாக புலம்பெயர் தரப்பினர் பங்களிப்புச் செய்கின்றார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவற்றை மேலும் பலப்படுத்தி ஒருங்கிணைப்பது எவ்வாறு என்பது பற்றி இப்போதே யோசிப்பது நல்லது.

இந்த ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பி பலமடைவோமாயின் சர்வதேச வல்லரசுகளை கையாள்வதற்கான மார்க்கங்களையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

Leave a Reply