இடைநிறுத்தப்பட்டுள்ள கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கோரி மட்டு நகரில் கண்டன பேரணி…!samugammedia

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ள கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமும் கண்டன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்லடியில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்திற்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்ட கனிமம் அகழ்வு அனுமதிப்பத்திர உரிமையாளர் சங்கத்தினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் தாங்கள் மண் அகழ்வுக்காக பயன்படுத்தும் கன்டர் வாகனங்களை வரிசையில் நிறுத்திவைத்து தமது ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.

கனிப்பொருள் அகழ்விற்குள் இலஞ்சம் வேண்டாம், சுற்றாடல் அமைச்சரே எங்களை வாழ்விடுங்கள், எமது மாவட்டத்தில் கனிப்பொருள் அகழ்வு அனுமதிப் பத்திரங்கள் அனைத்தையும் உடன் வழங்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட்டின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வாகனங்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களும் மட்டக்களப்பு நகர் நோக்கி ஊர்வலமாக சென்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரிடம் வழங்கி வைத்தனர்.

கனிமம் அகழ்வு தொடர்பான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளவர்களின் அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் வேறு எந்த மாவட்டங்களிலும் இல்லாத வகையிலான நடைமுறைகளைக்கொண்டுவந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்விற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் முன்னெடுத்துவருவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளைக்கொண்ட புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பணிப்பாளராக கடையாற்றியவரை கிழக்கு மாகாணத்திற்கான இணைப்பாளராக நியமித்து அவர் மூலம் இந்த கனிமப்பொருள் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சுற்றாடல் அமைச்சர் முன்னெடுத்துள்ளதாகவும் இது முற்றுமுழுதான பிழையான செயற்பாடுகள் எனவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இடைநிறுத்தப்பட்ட அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் கொழும்பு தலைமையகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தப்போவதாகவும் இங்கு எச்சரிக்கப்பட்டது.


Leave a Reply