பெற்றோர்களே சிறுவர்களின் கைகளில் தொலைபேசியை கொடுத்து அவர்களின் மூளை விருத்தியை குறைக்காதீர்..!

பெற்றோர்கள் தமது வேலைகளை கவனிப்பதற்காக சிறுவர்களை தொலைபேசியில் பொழுதை கழிக்க விடுவது அவர்களின் மூளை விருத்தியை குறைக்கும் என வலிகாம வலைய முன் பிள்ளை பருவ அபிவிருத்திப் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ச. கிருபானந்தன் தெரிவித்தார்.

நேற்றையதினம் வியாழக்கிழமை இணுவில் பொது நூலக சிறுவர் திறன் விருத்தி மையத்தில் இடம் பெற்ற சிறுவர் கண்காட்சியில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்றைய சூழ்நிலையில் அநேகமான பெற்றோர்கள் சிறுவர்களை  தொலைபேசியில் பொழுதை போக்காக்காட்டி விட்டு  தமது செயற்பாடுகளை மேற்கொள்வது பரவலாக அவதானிக்கப்படுகிறது.
ஒரு குழந்தையின் மூளை விருத்தியானது 4 தொடக்கம் 7 வயது வரை செல்லு நிலையில் அக்காலப் பகுதியில் மூளைக்கு கடத்தப்படுகின்ற பல விடயங்களை வைத்து எதிர்காலத்தில் சிறுவர் சிறுமியர் எவ்வாறு உருவாக்கப்படுவார்கள் என விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அனேகமான வீடுகளில் தொலைக்காட்சி நாடகங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அதனை கண்டு களிப்பதற்காக தமது பிள்ளைகள் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக பெற்றோரே தொலைபேசிகளை பிள்ளைகளிடம் வழங்கி விடுகின்றனர்.
 எல்லாப் பெற்றோர்களும் தொலைபேசிகளை  வழங்குவதாக நான் கூற வரவில்லை அநேகமாக சமூகத்தில் நடக்கின்ற அவதானிப்புகளை வைத்தே நான் கூறுகிறேன்.
சிறுவர்  மற்றும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கை கொடுக்க வேண்டுமானால் எமது மூதாதையர் காலம் தொட்டு பல்வேறுபட்ட கிராமத்து பொழுதுபோக்கு விடையங்கள் இருக்கின்றன.
பனம்மட்டை மற்றும் வாழைத்தண்டில்  வெடி அடித்தல், ஓலையில் காத்தாடி செய்தல், கழிவுப் பொருட்களில் தள்ளுவாண்டில் செய்தால் இவ்வாறு பல விடயங்கள் எமது மூதாதையர் காலத்தில் இருந்து பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது இவை எல்லாம் அருவி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பிள்ளைகளுக்கு வாங்கி கொடுக்கிறார்கள்.
குழந்தை பருவத்தில் பிள்ளை சித்திரம் சரியாக கீறுகிறதா அல்லது சரியாக பொருட்களை அடுக்குகிறதா என்பது பிரச்சனை அல்ல.
விரும்பினால் தாய் தந்தையோ அல்லது உறவினர்களோ குழந்தையுடன் சேர்ந்து சித்திரம் கூறுவது மற்றும் ஏனைய பொழுதுபோக்கு விடயங்களை செய்வது அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு ஆரோக்கியமான அணுகு முறையையும் புரிதலையும் ஏற்படுத்துகிறது.
அதனை விடுத்து பொழுதுபோக்கு என்று கூறி தொலைபேசியில் பிள்ளைகளை பிராக்காட்டுவது அவர்களுக்கு ஆரோக்கியமான மூளை விருத்திக்கு ஏற்ற செயற்பாட்டை வழங்காது.
ஒரு குழந்தை மூளை விருத்தி அடையும் வரை தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகமாக தேவைப்படுகின்ற நிலையில் தாய் தந்தை குழந்தையுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
ஆகவே தற்போது மாறிவரும் உலக மாற்றத்திற்கு தொழிலுக்குச் செல்லும் தாய் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவது சவாலாக இருந்தாலும் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக  சிலவற்றை தியாகம் செய்தே ஆக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply