மட்டக்களப்பு மாநகசபையின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவையொன்று இன்று மட்டக்களப்பு அமிர்தகழி பகுதியில் நடைபெற்றது.
மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் சபை கலைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கான சேவையினை அவர்களது காலடிக்கு சென்று வழங்கும் வகையில் அமிர்கழியில் உள்ள ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் அறிநெறி பாடசாலை மண்டபத்தில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.மதிவண்ணன் தலைமையில் பிரதி ஆணையாளர் யு.சிவராஜாவின் வழிகாட்டலின் கீழ் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டுவருகின்றது.
இந்த நடமாடும் சேவையில் மாநகரசபையின் அனைத்து பிரிவினரும் தமது கிளைகளை அமைத்து மக்களுக்கான சேவையினை வழங்கியதை காணமுடிந்தது.
மாநகர நிர்வாக எல்லைக்குட்பட்ட 1ம் , 6ம், 7ம் மற்றும் 8ம் வட்டாரங்களில் கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கின்ற மக்களுக்கான சேவைகளையும் உடனடித் தீர்வின் ஊடாக வழங்கும் வகையில் நடமாடும் சேவை நடாத்தப்படுகின்றது.
வரியிறுப்பாளர்கள் தமக்குரிய ஆதன வரியினை உரிய கழிவுடன் செலுத்துதல், ஆதனவரி பெயர் மாற்றம் தொடர்பான படிவங்கள் வழங்கல் மற்றும் ஆவணங்களை கையேற்றல்,பொதுச் சுகாதாரம் சார்ந்த முறைப்பாடுகளுக்கான தீர்வுகளை வழங்குதல்,வீதி அபிவிருத்தி, வீதி விளக்குகள், வடிகான்கள் மற்றும் ஏனைய விடயம் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொண்டு தீர்வு வழங்கல்,மாநகர சபை சார்ந்த பிணக்குகள், முரண்பாடுகளை தீர்வு காணல்.,கட்டட விண்ணப்பங்கள், காணி உப பிரிவிடுகை விண்ணப்பங்கள் என்பவற்றை வழங்கல், மற்றும் ஆவணங்களை கையேற்றல்.,ஆயுர்வேத மருத்துவ முகாம் ஊடாக நோயாளர் தமக்கான மருத்துவ சிகிச்சையை பெற்றுக் கொள்ளல் உட்பட பல்வேறு சேவைகள் இன்றைய தினம் வழங்கப்பட்டன.
இதன் போது மின் விளக்குகள் பொருத்துதல்போன்ற தேவைப்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வேலைக்குழுவினால் உடனடியாக மின்குமிழ்கள் பொருத்தும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.