பெண்களின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி தங்க நகைகளைக் கொள்ளையடிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்றின் உறுப்பினர்களில் ஐவர் வாகனங்கள் மற்றும் பல பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, பன்விலாஹேனவத்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தேகநபர்கள் ஐவரும் வீதியில் செல்லும் பெண்களின் முகத்தில் மிளகாய்த்தூளை வீசி அவர்களைத் தாக்கி தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், ஜெனரேட்டர், கார் கழுவும் இயந்திரம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்




