“என்ர மகனைப் போல வச்சு பார்தனான்” என தவறான முடிவெடுத்து உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் கூறியவாறே யாழ் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் 4ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்து வாக்குமூலம் வழங்குவதற்காக சென்ற போது, குறித்த வீட்டு உரிமையாளரான மூதாட்டி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இன்று (13) காலை உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது வெளியான மேலதிக தகவல்களின் படி,
தேறாங்கண்டல், துணுக்காய் மல்லாவியை சேர்ந்த ஜேசய்யா தேவரஞ்சன் (வயது – 31) என்ற திருமணமாகாத இளைஞன் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
4-ம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 3 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இரண்டு அறைகளை கொண்ட குறித்த வீட்டின் உரிமையாளரான மூதாட்டி ஒரு அறையில் வசித்துவந்த நிலையில் மற்றைய அறையில் இவர் வாடகைக்கு தங்கியிருந்துள்ளார்.
தனியார் மருந்து விற்பனை முகவராக கடமையாற்றி வந்த குறித்த இளைஞர் இந்த வாரம் கொழும்பிற்கு வேலை நிமித்தமாக சென்று திரும்பியுள்ளார். கொழும்பிற்கு சென்று திரும்பியதில் இருந்து வெளியே எங்கும் செல்லாது வீட்டிலேயே இருந்துள்ளார். அத்துடன் சோர்வாகவும் அவர் காணப்படுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு வாந்தி எடுத்துள்ளார். இதனை அவதானித்த மூதாட்டி தலைக்கு விக்ஸ் தடவிவிட்டதுடன் தேநீரும் அருந்த குடுத்துள்ளார். இன்று காலை எழுந்து பார்த்த போது குறித்த இளைஞர் தவறான முடிவெடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து முதாட்டியை விசாரணைக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.
இதையடுத்து இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு குறித்த மூதாட்டி சென்றுள்ளார்.
முறைப்பாடு பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கும் முன்னதாக அங்கிருந்தவர்களுடன் நடந்த சம்பவம் தொடர்பிலும், குறித்த இளைஞன் குறித்தும் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனைப் போல வச்சு பார்த்து வந்தனான் என கண்கலங்கியவாறு கூறிக்கொண்டிருந்த போதே மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார்.
கணவரை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த குறித்த மூதாட்டிக்கு குழந்தைகள் எவரும் இல்லாத காரணத்தினால் குறித்த இளைஞரை தனது மகனாக கருதி அக்கறையுடன் பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் இளைஞனின் திடீர் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொலிஸ் நிலையத்திலேயே மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்பட்டே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த மூதாட்டியின் பெயர் மலர் எனவும் அவருக்கு 72 வயது எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மூதாட்டியின் உறவினர்கள் கொழும்பில் உள்ளதால் மேற்கொண்டு தகவல்கள் எவையும் இதுவரை பெறப்பட்டிருக்கவில்லை.
உயிரிழந்த இளைஞருக்கு தாய் மற்றும் 3 சகோதரிகள் உள்ளனர். அதேநேரம் கடந்த 3 நாட்களாக குறித்த இளைஞரது கைபேசிக்கு தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இறப்புகள் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இளைஞரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மூதாட்டியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





