நல்லூர் திருவிழா முன்னாயத்த கூட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட்  21ஆம் திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ் மாநகர சபை ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டன.

குறித்த தீர்மானங்களின் படி, ஓகஸ்ட் 20ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்று வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும். வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

ட்ரோன் கெமராக்களைப்  பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் நிறைவேற்ற வருகின்ற தூக்கு காவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும் உள்ளிட்ட பல விடயங்கள் இவற்றுள் அடங்கும்.

 

இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரது பிரதிநிதி, யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள்,
பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *