இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பெளத்த தலைவர், இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்ததாக கூறப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. “ஏன் கோட்டாபய ராஜபக்ஷவை 69 இலட்சம் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்?” என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்;
“உயர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு சுமார் 5 வருடங்கள் நெருங்குகின்றன. மீண்டும் சேனல் 4 இனால் அந்தக் கதை மேலெழுகிறது. சேனல் 4 இதனை உலகிற்கே படம் போட்டுக் காட்டியது. இலங்கை இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. நாம் யுத்தம் முடிந்தும் இன்றும் ஜெனீவா செல்கிறோம், இது நாட்டிற்கே இரு சாபக்கேடு. இதற்கும் நாம் முகங்கொடுக்க வேண்டும். யார் இந்த சேனல் 4 இற்கு சென்று இலங்கை பற்றி பேசியது? அவர் இலங்கையில் பிறந்த மௌலானா இங்குள்ள எம்பி ஒருவரின் செயலாளராகவும் இருந்தவர்.
இவர் இலங்கை பற்றி கூறியது உண்மையா பொய்யா என நாம் ஆராய வேண்டும். எப்போதும் நடப்பது இது தான், எந்தப் பிரச்சினை வந்தாலும் அது நம் நாட்டில் தீர்த்து வைக்கப்படாது சர்வதேசம் தான் தலையிடும். இது மாற வேண்டும். நான் சில கேள்விகளை கேற்க விரும்புகிறேன்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பெளத்த தலைவர், இவர் அரசியலுக்கு வர வேண்டும் என்பதால் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.. என்றெல்லாம் கதைகளை கேட்டோம்..
2019 ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளராக இருந்தவர் சஜித் பிரேமதாச, அவரது வெற்றிக்கு நானும் வேலை செய்தேன். அவர் அப்போ சஜித் பிரேமதாச சிங்கள பெளத்தர் இல்லையா?
ஏன் கோட்டாபய ராஜபக்ஷவை 69 இலட்சம் மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? ஏன் சஜித் பிரேமதாசவை தேர்ந்தெடுக்கவில்லை? அப்படி என்றாலும் 69 இலட்ச மக்களும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டுமா? அப்படி என்றால் அவர்கள் ஒத்துழைத்தார்களா?
அப்படி என்றால் ஏன் சஜித் பிரேமதாச மேடையில் ஏறி தெட்டத் தெளிவாக சரத் பொன்சேகாவை புகழ்ந்து தள்ளினார்? பாதுகாப்பு அமைச்சராக தேர்ந்தெடுப்பதாகவும் தெரிவித்தார்? அப்படி இருக்க மக்கள் ஏன் தேசிய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கவில்லை? அது பாரிய பிரச்சினையே.. அதனால் கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இந்தத் தாக்குதலை நடத்தியது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த சம்பவம் நிகழும் போது மைத்திரிபால சிறிசேன, நாட்டின் தலைவராக ஜனாதிபதி என்ற முறையில் அரசாங்கத்தினுள் உங்களுக்குள் என்னதான் பிரச்சினை இருந்தாலும், 22 மில்லியன் மக்களது பாதுகாப்பு உங்கள் கையில் இருந்தது. உங்கள் தனிப்பட்ட கோபங்கள் தனிப்பட்ட முறையில் தீர்க்க வேண்டும், அதற்கு மக்களை பாவித்திருக்காமல் இருந்திருக்க வேண்டும்…” என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்திருந்தார்.