புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் மாபெரும் சித்திரைப்புத்தாண்டு பெருவிழா!

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பெரு விளையாட்டு   போட்டிகள் புதுக்குடியிருப்பில் மிகச்சிறப்பான முறையில்  இடம்பெற்றிருந்தது.

இளைஞர்களை நல்ல பாதையில் வழிநடத்தி எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டு பெருவிழா விளையாட்டு நிகழ்சிகள் மிக கோலாகாலமாக இடம்பெற்றிருந்தது.

அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 23ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் உதைபந்தாட்டப் போட்டிகள் நடைபெற்று ஆண் , பெண்களுக்கான இறுதி போட்டிகள் இடம்பெற்றிருந்ததுடன், நேற்றையதினம் (15) காலை ஆண், பெண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் இடம்பெற்றிருந்ததனை தொடர்ந்து மாலை பல்வேறு மைதான விளையாட்டுகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.

19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 19 வயதிற்குட்பட்ட இளைஞர், யுவதிகளுக்கும் தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டதோடு,  ஆண்களுக்கான கிளித்தட்டு, பெண்களுக்கான கிடுகு இழைத்தல், தேங்காய் திருவுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும், முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.

குறித்த போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பெறுமதி மிக்க பணபரிசில்கள்  வழங்கி வைக்கப்பட்டதோடு, நினைவு கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

புதுக்குடியிருப்பு மேம்பாட்டுப் பேரவையின் தலைவர் பொன்.பேரின்பநாயகம் தலைமையில் இடம்பெற்ற மாபெரும் விளையாட்டுப்போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சிறப்பு விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக  அரச அதிபர் சி.ஜெகாந்தன், புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி  ப.சத்தியரூபன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ. விஜயகுமார், உதவிப் பிரதேசசெயலாளர், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின்  ஆலோசகர்கள், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவை சார்பாக லண்டனிலிருந்து வருகை தந்த தவசீலன், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் உறுப்பினர்கள், மாவட்ட விளையாட்டு துறை உத்தியோகத்தர் முகுந்தன் ,புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், கு.அகிலன், சற்குணதாஸ் , சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்து  சிறப்பித்திருந்தார்கள்.

Leave a Reply