வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்றுடன் 3354 நாட்களை எட்டியுள்ளது.
வவுனியாவில் 3354 நாட்களாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், உள்நாட்டு விசாரணை அமைப்புகள் மீது நம்பிக்கை இழந்து, சர்வதேச விசாரணையை வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.
உலகிலேயே மிக நீண்டகாலமாக முன்னெடுக்கப்படும் மனித உரிமைப் போராட்டங்களில் ஒன்றாக இது கருதப்படும் நிலையில், இன்றைய தினம் (17) வவுனியாவில் விசேட ஊடகச் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.
இச்சந்திப்பில் கருத்து வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாய்மார்கள், இலங்கையின் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் (OMP) மீது கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
அதிகாரிகள் மீண்டும் எங்களை அழைத்து, ஏற்கனவே வழங்கிய தகவல்களையே மீண்டும் கேட்கின்றனர். இது உண்மை கண்டறியும் முயற்சி அல்ல, மாறாகப் பாதிக்கப்பட்டவர்களை மன ரீதியாகச் சோர்வடையச் செய்து போராட்டத்தைக் கைவிட வைக்கும் தந்திரமாகும்.
போர் முடிந்து 15 ஆண்டுகளாகியும் உள்நாட்டு அமைப்புகளால் எந்தவொரு முன்னேற்றத்தையும், நீதியையும் பெற்றுத்தர முடியவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளில் இனி நம்பிக்கை இல்லை என அறிவித்த தாய்மார்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன நேரடியாக இதில் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
செயற்கைக்கோள் தகவல்கள், நவீன நுண்ணறிவு விசாரணைகள் மற்றும் நீதிமரபியல் (Forensic) ஆய்வுகள் மூலம் தமது உறவுகளைக் கண்டறிய சர்வதேச சமூகம் முன்வர வேண்டும்.ஐக்கிய நாடுகள் சபையின் நேரடி மேற்பார்வையில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.நீதி மற்றும் பொறுப்பேற்பு ஆகியவற்றுக்குத் தெளிவான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
எங்கள் குழந்தைகள் இன்னும் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை நாட்களாக வீதியில் போராடுகிறோம்.உண்மை இல்லாமல் நீதி இல்லை; நீதி இல்லாமல் எமக்கு அமைதி இல்லை எனத் தாய்மார்கள் உருக்கமாகத் தெரிவித்தனர்.





