வவுனியா வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் சுமார் 07 சமூக அபிவிருத்தி மற்றும் கல்விசார் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்களின் 2026ம் ஆண்டிற்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெரியதம்பனை கிராம அபிவிருத்திச்சங்க கட்டிட திருத்தம், நீலியாமோட்டை சரஸ்வதி வித்தியாலய ஸ்மாட் வகுப்பறை திருத்தம், கங்கன்குளம் சண்முகபுரம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கான தளபாடங்கள் வழங்கல், 2 ஆம் பண்ணை நாவலர் முன்பள்ளி காணிக்கான நெற் வேலி அமைத்தல், முதலியார்குளம் புனித அந்தோனியார் முன்பள்ளியில் சிறுவர் பூங்கா அமைத்தல், கப்பாச்சி பிள்ளையார் ஆலய புனரமைப்பு, கங்கன்குளம் ஶ்ரீ சுப்ரமணியம் சனசமூக நிலையத்திற்கான தளபாடங்கள் வழங்கல் ஆகிய வேலைத்திட்டங்களிற்கே குறித்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செட்டிகுளம் பிரதேசசபை உபதவிசாளர் தேவசகாயம் சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர்களான அலைக்சாந்தர் அலைக்ஸ்யூட், யோகேஸ்வரன் சனோஜன், பாராளுமன்ற உறுப்பினரின் செட்டிகுளம் பிரிவு இணைப்பாளர் சண்முகநாதன் பத்மசீலன் ஆகியோரின் கோரிக்கையின் பிரகாரம் குறித்த பகுதியை சேர்ந்த அமைப்புக்களின் அபிவிருத்தியை கருத்தில்கொண்டு குறித்த நிதியொதுக்கீட்டினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.
இவற்றிற்கான அனுமதி கடிதங்கள் அண்மையில் செட்டிகுளம் கட்சி அலுவலகத்தில் வைத்து உரிய அமைப்புக்களின் பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை உபதவிசாளர் தே.சிவானந்தராசா, பிரதேசசபை உறுப்பினர் அ.அலைக்ஸ்யூட், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாலர் பாலச்சந்திரன் சிந்துஜன், செட்டிகுளம் பிரதேச இணைப்பாளர் ச.பத்மசீலன் உள்ளிட்டோர் குறித்த அனுமதி கடிதத்தினை அமைப்பினரிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





