தேர்தல் காலத்தில் கச்சத்தீவை கையில் எடுப்பது தமிழக கட்சிகளின் வழமை"!

“இந்தியாவில் தேர்தல் காலம் வரும்போது, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் கச்சத்தீவு விவகாரத்தைப் பேசுபொருளாக்குவது ஒரு வழக்கமான நிகழ்வே தவிர, இது தொடர்பாக இந்திய அரசிடமிருந்து எங்களுக்கு எந்தவித உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் வரவில்லை” என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

​ வெள்ளிக்கிழமை (17) மாலை கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சரிடம், தமிழக அரசியலில் தற்சமயம் விவாதமாகியுள்ள கச்சத்தீவு குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கச்சத்தீவு தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரை இலங்கை அரசுக்கு எந்தவிதமான அதிகாரப்பூர்வமான வேண்டுகோள்களையும் விடுக்கவில்லை.

இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரசாரமாகவே இதனைப் பார்க்கிறோம். எனவே, இதற்குத் தேவையற்ற முறையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை.

1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையே கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

சர்வதேச ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமான ஒரு பகுதி என்பது உறுதியானது. வருங்காலத்தில் இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், அதனை இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை மூலம் கையாளத் தயாராக இருக்கிறோம்.

1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின்படி கடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்,

​இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் வலைகளை உலர்த்தவும், அங்குள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி உண்டு.

​ஆனால், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதற்கான உரிமை இந்திய மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை.

​இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்காத வகையில், சர்வதேச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இவ்விவகாரம் கையாளப்படுவதாகப் பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply