இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு

இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, இந்திய அரசாங்கம் வழங்கிய உதவிகள் குறித்து தலைவர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். 

குறிப்பாக, டித்வா புயலுக்கு பின்னரான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட அமெரிக்க டொலர் 450 மில்லியன் பெறுமதியான உதவி தொகை முக்கியமாக பாராட்டப்பட்டது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட பிற நிவாரண நடவடிக்கைகளும் பாராட்டப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த உதவிகள், பேரிடர் பாதிப்புகளை சமாளிக்கவும், மீள்குடியேற்ற முயற்சிகளை விரைவுபடுத்தவும் முக்கிய பங்காற்றியதாகவும் தமிழ் அரசியல் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் தமிழ்த் தலைவர்களிடையே ஒற்றுமை மிகவும் அவசியம் என்று இந்திய துணை ஜனாதிபத சி.பி.இராதாகிருஷ்ணன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் கரங்களைப் பற்றியவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது, சிறிதரன் மற்றும் சி.வி.கே. ஆகியோருர் புன்னகையுடன் தலையசைத்து ஆமோதித்து நன்றி கூறி விடைபெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பு, இலங்கை தமிழ் மக்களின் நலன், மீட்பு முயற்சிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply