எதிர்வரும் ஜூலை மாதம் மேற்கொள்ளப்படவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தின் போது, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபா வரை அதிகரிக்கக்கூடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன எச்சரித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருவதால்,
போக்குவரத்துக்கான செலவுகள் கணிசமாக உயர்ந்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
“வருடாந்த பேருந்து கட்டண திருத்தமானது தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதில்லை. அது கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண், அமெரிக்க டொலர் பரிமாற்ற வீதம், வங்கி வட்டி வீதங்கள் மற்றும் சந்தையில் பேருந்துகளின் விலை உள்ளிட்ட 12 முக்கிய அளவுகோல்களின் (Criteria) அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டுத் தீர்மானிக்கப்படுகிறது.
தற்போது நிலவி வரும் நாணய மதிப்பின் தொடர்ச்சியான வீழ்ச்சியானது, பேருந்து கட்டண மாற்றங்களில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய காரணியாக மாறியுள்ளது.”
டொலரின் விலை உயர்வால் உதிரிப்பாகங்கள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய பொருளாதாரச் சூழலானது பேருந்து உரிமையாளர்கள் மற்றும் அன்றாடப் பயணிகள் ஆகிய இரு தரப்பினருக்குமே பெரும் சவாலாக மாறியுள்ளதாகக் கெமுனு விஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.





