வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக பெருமளவான காடுகள் அழிப்பு!

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக வனவள திணைக்களத்தின் ஆதரவுடன் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன் ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கியின் 2025ம் ஆண்டின் பொருளாதார செயற்றிறன் தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்விடயத்தை வெளிப்படுத்தினார். 

அவர் அங்கு தெரிவித்ததாவது,

இலங்கை மத்திய வங்கியின்  2025ம் ஆண்டிற்கான நாட்டின் பொருளாதார செயற்றிறன் தொடர்பான அறிக்கையை இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்கின்றோம். இந்த அறிக்கையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதித்துறை நிலைமை, மத்திய வங்கியின் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் இடைக்கால பொருளாதார முன்நோக்கு ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளது.

2025இல் இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 % அதிகரிப்பை காட்டியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான ஏதுநிலைகளாக; அரசின் ஒழுங்குபடுத்தப்பட்ட நிதிக்கையாழுகை,மேம்பட்ட வெளியுறவு கொள்கை மற்றும் தொடர்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் எதிர்கொள்ளப்பட்ட சவால்களாக; 2025இன் பிற்பகுதியில் நாடு எதிர்கொண்ட டித்வா புயல், அமெரிக்காவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தீர்வுகொள்கையினால் உலகளாவியரீதியில் ஏற்பட்ட தாக்கம் போன்றவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பில் பின்வரும் துறைகள் முக்கிய பங்காற்றியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கைத்தொழில் (7.8%), சேவைகள்/சுற்றுலா, ஏனையவை  (3.3%), விவசாயம் (1.4%). அதேவேளை வேலையின்மை விகிதம் 2024 இல் காணப்பட்ட 4.4% இருந்து 3.9% ஆக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்றுமதி 1254 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இறக்குமதிக்காக 2134மில்லியன் டொலர்களும்( வாகன இறக்குமதிக்காக 195 மில்லியன் டொலர், எரிபொருள் 630மில்லியன் அமெரிக்க டொலர்) செலவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரமாக வர்த்தகப்பற்றாக்குறை 879.7மில்லியன் டொலர்களாகவும்,  சுற்றுலாப்பயணிகள் வருகை 19.8% ஆல் குறைவடைந்தும் உள்ளது. வெளிநாட்டுப் பணியாளர்களினூடான வருமானம் 17.5% அதிகரித்துள்ளதுடன் நாட்டின் மொத்த பண இருப்பு குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிகண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டுமானால் அதற்காக எம்மிடம் உள்ள திட்டம் என்ன?

குறிப்பாக நீண்டகால யுத்தத்தினால் சிதைவடைந்த வடக்கு-கிழக்கு மாகாணங்களின் இன்றைய பொருளாதார நிலை என்ன? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு 4.5% ஆக உள்ளது. கிழக்கு மாகாணத்தையும் சேர்த்துக்கொண்டால் கிட்டத்தட்ட 10% ஆகலாம். ஆனால் தனியொரு மேல் மாகாணம் 43% பங்களிப்பை வழங்குகிறது. இதை எவ்வாறு விளங்கிக்கொள்வது?

மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பில் முக்கிய பங்காற்றியுள்ளதாகக் கூறப்படும் 

கைத்தொழில் துறையை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி செய்ய அரசாங்கத்திடம் உள்ள திட்டம் என்ன? அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளீர்களா?

அங்கு தொழில்மயமாக்கல் ( Industrialization) என்பது அறவே இல்லை. பெரிய, நடுத்தர, சிறிய தொழிற்சாலைகளோ அல்லது உற்பத்தித்துறை சார்ந்த முதலீடுகளோ கொண்டுவரப்படவில்லை. தற்செயலாக யாராவது தொழில் முயற்சியாளர்கள் அங்கு வந்தால் மாகாணத்தில் அவர்களை ஏற்றுக்குக்கொண்டு தொழில்துறையை மேம்படுத்தக்கூடிய நிர்வாக ரீதியான கட்டமைப்பொன்று இல்லை. பொறுப்புவாய்ந்த அதிகாரிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் எந்தக்கரிசனையுமின்றி முயற்சியாளர்களை அலைக்கழித்து அவர்கள் தாமாகவே விலகும் நிலையை ஏற்படுத்துகிறார்கள். 

உற்பத்திசெய்யப்படும் பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துவதை தவிர வேறெந்த வசதிகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏற்படுத்தப்படவில்லை. மதிப்புக்கூட்டல்(Value addition) , முத்திரையிடல்( Branding) செயற்பாடுகள் மிக அரிதாகவே மேற்கொள்ளப்படுகிறது.

முதலீட்டாளர்களை கவரக்கூடியதாக முதலீட்டிற்கான உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படல் வேண்டும். துறைமுகம், விமானநிலையம், வீதி, மின்சாரம் போன்றவை அபிவிருத்திக்கான தடைகளாக அமையக்கூடாது. அதற்கான வசதிகள் இருந்தும் இன்றுவரை கவனிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? இந்திய அரசால் துறைமுக அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 22,000 மில்லியன் இலங்கை ரூபா மானியம் ஏன் பயன்படுத்தப்படாமல் உள்ளது?

வடக்கு மாகாணத்தின் சுற்றுலா துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப (சேவைகள்) அபிவிருத்திக்கான ஏதுநிலை நிறையவே உள்ளது. 

ஆனால் அத்தொழில்துறையை அபிவிருத்தி செய்வதற்கான மூலோபாயத்திட்டம் உள்ளதா? அவ்வாறான திட்டமொன்றை தயாரித்து உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டுவருவதற்கான தடை என்ன?

விவசாயம், விலங்கு வேளாண்மை மற்றும் மீன்பிடி ஆகியவை வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகும். ஆனால் மேற்படி துறைகள் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளதுடன் அழிந்துபோகும் நிலையில் உள்ளது. நீர்ப்பாசன மேம்படுத்தல், விவசாய நிலங்களை விடுவித்தல், மீன்பிடித்தொழிலை மேம்படுத்தல், விலங்கு வேளாண்மையை ஊக்கப்படுத்தல் செயல்பாடுகளில் பாரிய குறைபாடுகள் உள்ளது. உற்பத்தியை ஆரம்பிப்பதிலிருந்து

உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தல் வரை பாரிய பிரச்சனைகளுக்கு உற்பத்தியாளர்கள் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

எனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடிய பங்களிப்பையும் வழங்கவேண்டுமானால் மேற்கூறிய விடயங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். அதனூடாக வேலைவாய்ப்பிற்கான சந்தர்ப்பத்தை அதிகரித்து தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதுடன் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக உள்ள ஒதுக்குக்காடு சுமார் 40 ஏக்கர் வரையில் தற்போது அழிக்கப்படுகிறது. இவ்விடயத்தில் வனவள திணைக்களத்திற்கும் தொடர்புள்ளது. காடழிப்பு நடைபெறும் இடத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரத்திற்குள் வனவள திணைக்களத்தின் அலுவலகம் உள்ளது. இருப்பினும் காட்டு மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றிசெல்லப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கில் திரிவைத்தகுளம் காடு சிங்கள மக்களால் வெட்டப்பட்ட போது இதே வனவள திணைக்களம் கண்டும் காணாமல் இருந்தது. அதேவேளை தமது வயல் நிலத்தை துப்பரவு செய்யும்போது தமிழ் விவசாயிகள் கைது செய்யப்பட்டார்கள்.

திரிவைத்தகுள விவசாயிகளுக்கு எதிராக 2019ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 2025வரை மேற்படி காணிகள் தமது ஆழுகைக்கு உட்பட்ட வனமென வழக்கை நடாத்தி நீதிமன்றத்தை தவறாக வழிநடாத்திய வனவள திணைக்களம் 2021இலேயே அந்த காட்டை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு விடுவித்துள்ளார்கள். ஆனால் விவசாயிகளை தண்டிப்பதற்காக அந்த தினைக்களத்துடன் தொடர்பில்லாத இடத்திற்காக வழக்கை நடத்தியுள்ளதாக  தெரிவித்தார்.

Leave a Reply