புத்தளம் மாவட்டத்தின் உடப்பு பகுதியில் தென்மேல் பருவக் காற்றின் தாக்கம் காரணமாக நேற்று (21) இரவு கடுமையான காற்று மற்றும் கடல் அலையின் சீற்றம் நிலவியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அணையாக அமைக்கப்பட்ட கருங்கற்கள் தற்போது கடலுக்குள் இடிந்து விழுந்து கொண்டிருப்பதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும், கருங்கல் அணை அமைக்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதனால் கடலரிப்பு அபாயம் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அத்துடன், அறுவாய் பகுதி அதிகளவு நீர் தேங்கிய பின்னரே வெட்டப்பட வேண்டும் என்ற நிலையில், குறைந்த நீர்மட்டத்திலேயே அது வெட்டப்பட்டதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தொடர்ச்சியாக அதிகரித்து வரும் காற்றின் வேகமும் கடல் அலையின் சீற்றமும் காரணமாக, இன்று இரவு நிலைமை எவ்வாறு அமையும் என்ற அச்சத்தில் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் மிகுந்த மனவேதனையுடன் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





