குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் – தானசாலை ஏற்பாட்டாளர்களுக்கு அவசர வேண்டுகோள்!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு தானசாலைகளை (தன்சல்) ஏற்பாடு செய்பவர்கள், குளிர்பானங்களுக்கு பதிலாக தேநீர் மற்றும் காபி போன்ற சூடான பானங்களை வழங்குவதை ஊக்குவிக்குமாறு சுகாதார அமைச்சு அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.

நீரினால் பரவக்கூடிய நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதைக் கருத்திற்கொண்டே இந்த விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்துச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், குளிர்பானங்கள் வழங்கப்படும் தானசாலைகளில், அசுத்தமான நீரின் மூலம் பரவக்கூடிய நோய்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் மிக அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

எனவே, தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்து, பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டுச் சூடான பானங்களை மக்களுக்கு வழங்குவதற்கு அனைத்து ஏற்பாட்டாளர்களும் முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

நாட்டின் சில பகுதிகளில் தற்போது பதிவாகி வரும் தொற்றுநோய்ப் பரவல் நிலைமைகளைக் கருத்திற்கொண்டே, பொதுமக்களின் நலன் கருதி இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் அசேல குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply