பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுப்பதில் இலங்கை உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 79வது உலக சுகாதார மாநாட்டின் போது, “பூச்சிக்கொல்லிகளால் ஏற்படும் தற்கொலைகளைத் தடுத்தல்” என்ற தலைப்பிலான விசேட அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
1990ஆம் ஆண்டு முதல் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்கு இலங்கை கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்ததன் பின்னர், நாட்டின் தற்கொலை விகிதம் சுமார் 70 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
1995ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் மக்களுக்கு 47 ஆக இருந்த தற்கொலை விகிதம், 2022ஆம் ஆண்டில் 14 ஆக குறைந்திருப்பது இதற்கான முக்கிய ஆதாரமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அனைத்து நாடுகளும் தங்களது தேசிய தற்கொலைத் தடுப்பு திட்டங்களில் பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டை அவசியம் சேர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். குறைந்த செலவில் விரைவான பலனை அளிக்கும் நடவடிக்கையாக இது அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அமர்வை இலங்கை, கயானா, கென்யா, நைஜீரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
உலக சுகாதார அமைப்பு (WHO), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேச சங்கமும் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன.
வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியான ஆதரவை WHO மற்றும் UNEP போன்ற அமைப்புகள் வழங்க வேண்டும் என்றும், இலங்கை தனது அனுபவங்களை மற்ற நாடுகளுடன் பகிரத் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, பூச்சிக்கொல்லி கட்டுப்பாடு மட்டும் போதாது என்றும், சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகள் மற்றும் மனநல ஆதரவு திட்டங்களும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், 2027ஆம் ஆண்டுக்கான தற்கொலைத் தடுப்பு உலக மாநாட்டை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





