நெருக்கடியைத் தீர்க்கக்கூடிய வரைபடம் என்னிடம் உண்டு- திலித் ஜயவீர முழக்கம்!

முறையான மற்றும் அறிவியல் ரீதியான வேலைத்திட்டம் இன்றி எந்தவொரு பொறுப்பையும் ஏற்பது தவறு என்றும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைக் கையாள்வதற்குரிய தெளிவான வரைபடம் தன்னிடம் உள்ளதால் இன்று அந்தப் பொறுப்பை வழங்கினால் இந்த நொடியே அதனை நடைமுறைப்படுத்திக் காட்டத் தான் தயாராக இருப்பதாகவும் சர்வஜன அதிகாரம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் சர்வஜன அதிகாரம் மற்றும் மெல்போர்ன் சொலிடாரிட்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த “திலித்துடன் கைகோருங்கள்” எனும் விசேட மக்கள் சந்திப்பு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மெல்போர்ன் அகேசியா வளாக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய முதன்மையான பிரச்சினை டொலர் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள அழுத்தமே என்று சுட்டிக்காட்டிய திலித் ஜயவீர, அதனை முகாமைத்துவம் செய்வதற்கு முதலாவதாக மக்களுடன் உண்மையான மற்றும் நம்பிக்கையானதொரு உரையாடலை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“இன்று இந்நாட்டில் டொலர்கள் மட்டுமல்ல, நலிவடைந்துள்ள அரசியல் தலைவர்கள் மீதான நம்பிக்கையுமே முற்றாகச் சீர்குலைந்துள்ளது. அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். உண்மையை வெளிப்படையாகக் கூறுவதன் மூலம் சில மணிநேரங்களுக்குள்ளேயே மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை எம்மால் ஏற்படுத்த முடியும்.

எனது அரசியல் பயணம் பல்கலைக்கழக காலத்தில் ஆரம்பமானது. கோட்டாபய ராஜபக்ஷவின் அரசுக்குப் பிறகு உருவான எங்களது புதிய அரசியல் இயக்கம், மௌபிம ஜனதா கட்சியாகவும் பின்னர் ‘சர்வஜன அதிகாரம்’ கூட்டணியாகவும் உருவெடுத்தது.

பாரம்பரிய அரசியல் கோட்பாடுகளுக்குச் சவால் விடுக்கும் வகையில், ஒரு தொழில்முயற்சி சார்ந்த அரசை உருவாக்குவதே எங்களது இறுதி இலக்காகும்.

நாட்டின் தேசியத்தையும், பௌத்த நாகரிகத்தையும் அடிப்படையாகக் கொண்ட தேசியவாதமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அத்தியாவசியமானது. இது எவ்வகையிலும் இனவாதமல்ல, மாறாக நாட்டைத் தட்டியெழுப்புவதற்கான உந்துசக்தியாகும்.

பாடசாலைக் கல்வியிலிருந்து நாடாளுமன்றம் வரை, இளைஞர்களைப் புத்தாக்கத்துடன் சிந்திக்கும் மற்றும் இடர்பாடுகளை முகாமைத்துவம் செய்யக்கூடிய தொழில்முயற்சியாளர்களாக மாற்ற வேண்டும்.

சர்வதேச அரசியல் மற்றும் நிதி நிறுவனங்களின் செல்வாக்குக்கு அடிபணியாமல் நாட்டை எவ்வாறு முன்னோக்கிக் கொண்டு செல்வது என்பதுதான் தற்போதைய பெரிய சவாலாக உள்ளது. அதனை முறியடிப்பதற்கான ஆளுமையும், அறிவும் என்னிடம் இருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை மட்டுமே நாம் முழுமையாக நம்பியிருக்க முடியாது. நாம் அவர்களுடன் சமநிலையில் பேச்சு நடத்தி, எமது நாட்டின் இறையாண்மைக்குப் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கடன் தொகைகளை வழங்குபவர்களைக் காட்டிலும், கடன்பட்ட நாடாகிய நாம் எந்தளவுக்குப் பலமான நிலையில் பேச்சுகளை முன்னெடுக்கின்றோம் என்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. அந்த வலிமையும் ஆளுமையும் கொண்ட தலைமைத்துவமே நாட்டுக்குத் தேவை.

எங்களது சர்வஜன அதிகார சபையின் ஊடாகக் கிராமப்புற மட்டங்களில் மக்களைத் திரட்டி, வெறும் அரசியல் பிரசாரங்களை மட்டும் முன்னெடுக்காமல், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பயிற்சிகள் மற்றும் மூலதன உதவிகளை வழங்கி வருகின்றோம். இதன் மூலம் ஏற்கனவே 50 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பல புதிய தொழில்முயற்சியாளர்கள் பயனடைந்துள்ளனர்.

தாயகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்தாலும், இலங்கை மீது பற்றுறுதியுடனும் நேசத்துடனும் இருக்கும் மெல்போர்ன் வாழ் இலங்கையர்களின் இந்த அக்கறை, எதிர்காலத்தில் ஒரு தொழில்முயற்சி சார்ந்த இலங்கையை உருவாக்குவதில் முக்கிய மைல்கல்லாகவும் பெரும் சக்தியாகவும் அமையும்.” – என்றார்.

Leave a Reply