சஹ்ரானுக்கு உதவிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்; விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – முஜிபுர் ரஹ்மான்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களின் உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் முழுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

நேற்றைய தினம் விமல் வீரவன்ச உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டமை குறித்து இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அரசாங்கம் இந்த விசாரணை விவகாரத்தை சரியான முறையில் கையாண்டு வருகிறதா என்பதை எதிர்க்கட்சி என்ற ரீதியில் தாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் சஹ்ரானின் குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இந்தச் சம்பவம் குறித்து முறையான மற்றும் ஆழமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இதன் பின்னணியில் உள்ள உண்மைத்தன்மை முழுமையாகக் கண்டறியப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 சஹ்ரானுக்கு இத்தகைய பாரிய அழிவை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருந்த, தற்போது வெளியில் நடமாடும் நபர்களுக்கு தகுந்த தண்டனையைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளதாக அவர் நினைவூட்டினார். 

இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தால் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி, தனிப்பட்ட ரீதியில் தானும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட ரஹ்மான், சுரேஷ் சலே உள்ளிட்டோருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகள் நேர்மையான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், சுரேஷ் சலேயிற்கு எதிராக எதிர்க்கட்சிக் கூட்டணி என்ற ரீதியில் நடத்தப்பட்ட போராட்டங்களுக்கும் தமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர் இதன்போது பகிரங்கமாக தெளிவுபடுத்தினார். 

தங்களது கட்சி அத்தகைய அரசியல் ரீதியான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், குற்றம் சாட்டப்பட்டவர் சிங்களவரா, முஸ்லிமா, தமிழரா அல்லது கிறிஸ்தவரா என்பது முக்கியமல்ல; சம்பவத்துடன் தொடர்புடைய தகவல் அல்லது சான்றுகள் இருந்தால், எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தின் மூலம் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply