தற்போதைய அரசின் செயற்திறனற்ற தன்மையினாலும், அனுபவமின்மையினாலும் நாடு மிக வேகமாக வீழ்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றது என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் குறித்து நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்தக் விடயங்களைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கடந்த பொதுத்தேர்தல் காலங்களில் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தரப்பினர், நாடாளுமன்றத்துக்குத் தகுதியான ‘மலர்க்கன்றுகள்’ போன்ற புத்திஜீவிகளை அனுப்புமாறு மக்களிடம் கோரியிருந்தனர். ஆனால், தற்போது அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை ‘களைப்பயிர்கள்’ என அவர்களே விமர்சிப்பது மக்களை அடியோடு ஏமாற்றும் செயலாகும்.
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போதைய அரசின் கீழ் அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமே அரிசி இறக்குமதி செய்யப்படும் எனக் கூறிவிட்டு, தற்போது பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுகின்றது. இதனால் உள்நாட்டு விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு முறையான விலையோ, சந்தை வாய்ப்போ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரிசி மாஃபியாவை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது தந்திரோபாயமாக அரிசி கிலோ ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளனர்.
மேலும், சோளம், முட்டை போன்றவற்றுடன் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உப்பைக் கூட வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவலநிலை தற்போதைய அரசின் கீழ் ஏற்பட்டுள்ளது.
முற்காலத்தில் வீட்டில் என்ன தட்டுப்பாடு இருந்தாலும், உப்புக்கும் தேங்காய்க்கும் தட்டுப்பாடு வரக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆனால், இன்று சமையலறையில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஒரு கிலோ உப்பின் விலை 300 முதல் 400 ரூபா வரை அதிகரித்துள்ளது. இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாக இருந்தும் இந்த நிலை ஏற்பட்டுள்ளமை வெட்கக்கேடானது.
கடந்த நல்லாட்சி அரசு வீழ்வதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்நடத்தப்பட்டன. ஆனால், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடமும் சில மாதங்களும் கடந்துள்ள நிலையிலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அச்சப்பட்டு, அது குறித்துப் பேசுவதைக் கூட தவிர்த்து வருகின்றது.
திறமையற்ற மற்றும் அனுபவமற்ற ஒரு குழுவினரிடம் நாடு ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மக்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நாடு பேராபத்தை நோக்கிச் செல்வதையே தற்போதைய நிலவரங்கள் காட்டுகின்றன.” – என்றார்.





