முத்துநகர் மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் -இம்ரான் எம்.பி!

திருகோணமலை மாவட்டத்தின்  முத்துநகர் பகுதியில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் சுமார் 230 தமிழ் பேசும் முஸ்லிம் குடும்பங்கள் இன்று எதிர்கொண்டு வரும் நில மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பாக நான் மிகுந்த கவலையையும் கவனத்தையும் வெளிப்படுத்துகின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (13) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 

முத்துநகர் மக்களின் பிரதான வாழ்வாதார ஆதாரமாக விளங்கிய விவசாய நிலங்கள் தொடர்பாக நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகள் காரணமாக, அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களையும் பொருளாதார பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். 

தங்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள அமைதியான ஜனநாயகப் போராட்டங்களும் கவனத்திற்குரியவையாகும்.

நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் தமது வாழ்வாதாரம், குடியிருப்பு பாதுகாப்பு மற்றும் சட்டபூர்வ உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. குறிப்பாக பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் பிரச்சினைகள் மனிதாபிமான அடிப்படையில் அணுகப்பட வேண்டியது அவசியமாகும்.

எனவே, முத்துநகர் மக்களின் குறைகளை உடனடியாக ஆராய்வதற்கும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் தரப்பினருடன் கலந்துரையாடி நீதியான மற்றும் நிலையான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

அதேவேளை, சட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் தங்களால் இயன்ற ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

முத்துநகர் மக்களின் பிரச்சினை ஒரு நிலப் பிரச்சினை மட்டுமல்ல; அது அவர்களின் வாழ்வுரிமை, பொருளாதார பாதுகாப்பு மற்றும் எதிர்கால இருப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையாகும். எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்வுடனும் மனிதாபிமான அணுகுமுறையுடனும் செயல்பட வேண்டும்.

மக்களின் நியாயமான உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்காகவும், நீதியான தீர்வு எட்டப்படுவதற்காகவும் நான் தொடர்ந்தும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன் என்பதை இத்தருணத்தில் உறுதியளிக்கின்றேன்.

Leave a Reply