QR குறியீடு கேட்ட ஊழியரை விரட்டித் தாக்கிய இளைஞர்கள்

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளிய 10ஆம் கட்டை பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில், QR குறியீட்டை (QR Code) கேட்ட ஊழியர் மீது இரு இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த இரு இளைஞர்கள், தங்களது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புமாறு ஊழியரிடம் கோரியுள்ளனர். இதன்போது, நடைமுறைக்கு அமைவாக எரிபொருள் வழங்குவதற்கான QR குறியீட்டைக் காட்டுமாறு ஊழியர் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “நாங்கள் மதுரங்குளியைச் சேர்ந்தவர்கள்; எங்களுக்கு என்ன QR குறியீடு வேண்டும்?” எனக் கூறி, ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ஓட ஓட விரட்டி தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தலைக்கவசம் அணியாமல் வந்திருந்ததுடன், அவர்கள் மதுபோதையிலும் இருந்ததாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு (CCTV) கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மதுரங்குளி சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply