எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும் – வடக்கு ஆளுநர்!

நாம் தற்போது ஆண்டின் அரைப்பகுதிக்கு வந்துள்ளோம். எனவே, எஞ்சியுள்ள மாதங்களுக்குள் திட்டங்கள் அனைத்தும் துரிதமாக நிறைவுறுத்தப்பட வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து முழுமையான ஒத்துழைப்பை வழங்கிப் பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகனின் பங்குபற்றுதலுடன் இன்று (19.06.2026) வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தனது இணைத் தலைமையுரையை ஆற்றினார். இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், ‘அனைவரும் தமது பெறுமதியான நேரத்தைச் செலவிட்டே இவ்வாறான கூட்டங்களில் பங்கேற்கின்றனர். எனவே, இந்தக் கூட்டத்தை மிகவும் வினைத்திறனாகவும் ஆரோக்கியமான முறையிலும் முன்கொண்டு செல்ல அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,’ எனக் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், ‘இங்கு வருகை தந்துள்ள அனைவரும் கற்றவர்கள். எனவே, அனைவரையும் பரஸ்பரம் கௌரவமாக நடத்த வேண்டும்,’ என வலியுறுத்தினார். அத்துடன், வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களமானது தனது வேலைத்திட்டங்களை மிகவும் வேகமாக முன்னெடுத்து வருவதாகவும், மேலதிக வேலைகளைக் கூட அவர்கள் தாமாகவே கோரிப் பெற்றுச் செய்வதாகவும் அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இம்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பல விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தனித்தனியாக ஆராயப்பட்டன. குறிப்பாக, மாவட்டச் செயலகத்தால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மாகாண சபையால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் என அனைத்தும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

கூட்டத்தின் மீள்குடியேற்றம் தொடர்பில் நீண்ட நேரம் விரிவாக ஆராயப்பட்டது.

கட்டடங்களுக்கான குடிபுகு சான்றிதழானது தனியாருக்கு மாத்திரமன்றி, அரச கட்டடங்கள் மற்றும் திணைக்களங்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என ஆளுநரால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் ஊடாக மாவட்டக் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபையின் அவைத் தலைவர் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கௌரவ அர்ச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர பிரதி முதல்வர், நகர மற்றும் பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கடற்படைத் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply